கொரோனா தாக்கம் குறையாததால் ஊரடங்கை நீட்டிப்பது அவசியம் - பிரதமரிடம் மாநிலங்கள் வலியுறுத்தல்


கொரோனா தாக்கம் குறையாததால் ஊரடங்கை நீட்டிப்பது அவசியம் - பிரதமரிடம் மாநிலங்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 April 2020 12:15 AM GMT (Updated: 27 April 2020 9:58 PM GMT)

கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஊரடங்கை நீட்டிப்பது அவசியம் என்று பிரதமர் மோடியிடம் மாநில முதல்-மந்திரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் அனைத்து பணிகளும் முடங்கியதாலும், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வருமானம் இன்றி மக்கள் தவிக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு ஏற்கனவே தளர்த்தி இருக்கிறது.

ஊரடங்கு வருகிற மே 3-ந் தேதியுடன் முடிவுக்கு வர இருக்கும் நிலையில், கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை. நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை

இந்த நிலையில், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கிய பிறகு அவர் காணொலி காட்சி மூலம் மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்துவது இது 4-வது தடவை ஆகும்.

பிரதமர் மோடியுடன் உள்துறை மந்திரி அமித்ஷா, சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் மற்றும் பிரதமர் அலுவலக, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), சந்திரசேகர ராவ் (தெலுங்கானா), எடியூரப்பா (கர்நாடகம்), மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), உத்தவ் தாக்கரே (மராட்டியம்), கொன்ராட் சங்மா (மேகாலயா), யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்), நிதிஷ் குமார் (பீகார்), அசோக் கெலாட் (ராஜஸ்தான்) உள்ளிட்ட முதல்-மந்திரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

நீட்டிக்க வலியுறுத்தல்

போதிய நேரமின்மை காரணமாக நாராயணசாமி, நிதிஷ்குமார், கொன்ராட் சங்மா உள்ளிட்ட 9 மாநில முதல்-மந்திரிகள் மட்டுமே பேசினார்கள். மற்ற மாநிலங்களில் முதல்-மந்திரிகள் தங்கள் கருத்துகளை பிரதமருக்கு அனுப்பி வைத்தனர். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சார்பில் அந்த மாநில தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ், கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கலந்துரையாடலின்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக முதல்-மந்திரிகளின் கருத்துகளை பிரதமர் மோடி கேட்டு அறிந்தார்.

அப்போது பேசிய பெரும்பாலான முதல்-மந்திரிகள், நாட்டில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாததால் மே 3-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது அவசியம் என்று வலியுறுத்தினார்கள்.

கொரோனா பரவல் அதிகமாக உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் (‘ஹாட்ஸ்பாட்’) ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றும், மற்ற பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் சிலர் கேட்டுக் கொண்டனர்.

மேகாலயா முதல்-மந்திரி கொன்ராட் சங்மா பேசுகையில், மே 3-ந் தேதிக்கு பிறகும் தங்கள் மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிக்க விரும்புவதாக கூறியதோடு, கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டல பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

நிதி உதவி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-மந்திரிகள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும் என்றும், கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்க வேண்டும் என்றும் அவர்கள் யோசனை தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முதல்-மந்திரிகள், சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும், சர்வதேச எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் யோசனை தெரிவித்தனர்.

நெருக்கடியான இந்த காலகட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த முதல்-மந்திரிகள் மருத்துவ, சுகாதார பணியாளர்கள் மற்றும் போலீசாரின் பணிகளையும் பாராட்டினார்கள்.

வெளிமாநில தொழிலாளர்கள்

வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சினை குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. கடுமையான சமூக விலகல் கட்டுப்பாடுகளுடன் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது.

தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளே வர அனுமதிக்கும் வகையில் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து கட்டுப்பாட்டை தளர்த்துவது குறித்து ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஷ்கார், கேரளா, பீகார், ஆந்திர மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

பிரதமர் மோடி பேச்சு

இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நல்ல பலனை தந்து இருக்கிறது. கடந்த 1½ மாதத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை நாம் காப்பாற்றி இருக்கிறோம்.

இந்தியாவின் மக்கள் தொகை பல நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு சமமானது ஆகும். மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நிலைமை ஒன்றுபோல்தான் இருந்தது. உரிய நேரத்தில் நாம் ஊரடங்கை அமல்படுத்தி, கட்டுப்பாடுகளை விதித்ததால் ஏராளமான மக்களை காப்பாற்ற முடிந்தது. என்றாலும் கொரோனாவின் பாதிப்பில் இருந்து நாம் இன்னும் விடுபடவில்லை என்பதையும், தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்த நாடு இதுவரை தொடர்ச்சியாக இரு ஊரடங்குகளை கண்டு இருக்கிறது. சில அம்சங்களில் இரண்டும் வெவ்வேறானவை. இது அடுத்து என்ன? என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

பொருளாதார வளர்ச்சி

கொரோனாவை ஒழிக்க தொடர்ந்து போராடுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் பொருளாதார வளர்ச்சிக்கும் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நம்மால் முடிந்த அளவுக்கு நாம் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதோடு, சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் மக்கள் தங்கள் செல்போனில் ‘ஆரோக்கிய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

கொரோனாவுக்கு எதிரான மருந்து மற்றும் சிகிச்சை அளிக்கும் கருவிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

தீவிரமாக அமல்படுத்த வேண்டும்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். தீவிர நடவடிக்கைகள் மூலம் சிவப்பு மண்டலங்களை ஆரஞ்சு மண்டலமாகவும், பின்னர் அதை பச்சை மண்டலமாகவும் மாற்றும் முயற்சியில் மாநிலங்கள் ஈடுபடவேண்டும்.

கோடைகாலம் முடிந்து அடுத்து தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால், மழை காலத்தில் நோய்க்கிருமி அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இனி வரும் மாதங்களிலும் கொரோனாவின் பாதிப்பு இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்து இருப்பதால், முக கவசம் என்பது நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக வரும் நாட்களிலும் நீடிக்கும்.

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு உள்ளது. அதேசமயம் அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பது பற்றியும் கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

நாராயணசாமி

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூட்டத்தில் பேசிய பெரும்பாலான முதல்-மந்திரிகள், சில பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிப்பதோடு, 3-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். கொரோனா தொற்று பரவி வருவதால் ஊரடங்கை நீக்கும் பிரச்சினையில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற அவசியத்தை அனைத்து முதல்-மந்திரிகளும் ஒருமனதாக பிரதமரிடம் தெரிவித்தனர்.

பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான கொள்கையை வகுக்க வேண்டும் என்று முதல்-மந்திரிகள் கூறினார்கள். ஆனால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் எதுவும் கூறவில்லை. பொருளாதாரத்தை மீட்டெடுக்க 2008-ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிவிக்கப்பட்டதை போன்ற நிதி உதவி திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரிகள் கேட்டுக் கொண்டனர். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Next Story