அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் விவகாரம்- அவசர சட்டம் பிறப்பிக்கிறது கேரள அரசு


அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் விவகாரம்-  அவசர சட்டம் பிறப்பிக்கிறது கேரள அரசு
x
தினத்தந்தி 29 April 2020 9:29 AM GMT (Updated: 29 April 2020 10:50 AM GMT)

பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 25 % வரை பிடித்துக்கொள்ளும் வகையில் கேரள அரசு அவசர சட்டம் பிறப்பிக்க உள்ளது.

திருவனந்தபுரம், 

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதி மற்றும் மாநில முதல்வர்களின் பொது நிவாரண நிதி மூலம் நன்கொடை திரட்டப்பட்டு வருகிறது.  அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சாமானியர்கள் என அனைத்துத் தரப்பினரும், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். 

  இதற்கிடையே, கேரளாவில் கொரோனா நிவாரண பணிகளுக்காக அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசு திட்டமிட்டது. இந்த சம்பளத்தை 5 தவணைகளாக, அதாவது ஒவ்வொரு மாதமும் 6 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய கேரள அரசு முடிவு செய்து ஆணைப் பிறப்பித்தது. 

ஆனால், அரசின் இந்த முடிவுக்கு எதிராக அரசு ஊழியர்கள் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட், ஊழியர்களின் சம்பள பிடித்தம் தொடர்பான அரசின் பிறப்பித்த உத்தரவுக்கு 2 மாதங்கள் இடைக்கால தடை விதித்தது. 

இந்த நிலையில்,  கொரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நிதியை அதிகரிக்கும் வகையில், ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு தொகையை பிடித்தம் செய்வதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு  பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கேரள நிதி மந்திரி டி எம் தாமஸ் இசாக்,  “பேரிடரின் போது அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் அளவுக்கு ஒத்திவைக்க புதிதாக பிறப்பிக்கப்பட உள்ள அவசர சட்டம் வழிவகுக்கும். 

ஒத்திவைக்கப்பட்ட சம்பள தொகையை, மீண்டும் எப்போது அளிக்கலாம் என்று 6 மாதத்திற்குள் அரசு முடிவு எடுத்துக்கொள்ளலாம். ஏற்கனவே அறிவித்தபடி 6 நாட்கள் சம்பளம் மட்டுமே அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் எனவும், ஊழியர்களின் சம்பளம் பிடிப்பு விவகாரத்தில் உரிய சட்டப்பூர்வ  ஆதரவு இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியதால், சட்டப்பூர்வமாக்கும் வகையில் அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்” என்றார். 

Next Story