இந்தியாவில் ஒரே நாளில் 103 பேரின் உயிரை பறித்த கொரோனா; பாதிப்பு 56 ஆயிரத்தை கடந்தது
ஒரே நாளில் கொரோனா இந்தியாவில் 103 பேரின் உயிரை பறித்துள்ளது. நாட்டில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துவிட்டது.
புதுடெல்லி,
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் உருவான கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாததால், கொரோனா பல்வேறு நாடுகளிலும் தனது ஆட்டத்தை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் இந்த கொடூர வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென கடந்த 2-ந்தேதி 2,411 பேரை கொரோனா, பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதுவே அதிகம் என எண்ணிய நேரத்தில் அடுத்தடுத்த நாட்களில் பாதிப்பு அந்த எண்ணிக்கையை விஞ்சியது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக 3 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொரோனா தனது வலையில் சிக்க வைத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
மேலும் கொரோனாவின் பிடியில் சிக்கி ஒரே நாளில் 103 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதில் 43 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். குஜராத்தில் 29 பேரையும், மத்திய பிரதேசத்தில் 8 பேரையும், மேற்கு வங்காளத்தில் 7 பேரையும், ராஜஸ்தானில் 5 பேரையும், தமிழகம், உத்தரபிரதேசம் மற்றும் ஆந்திராவில் தலா 2 பேரையும், பீகார், டெல்லி, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா ஒருவரையும் ஒரே நாளில் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது. இதனால் 1,783-ல் இருந்து 1,886 ஆக பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் 56,342 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 16,540 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகவும், 37,916 பேர் கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனாவின் கோரதாண்டவத்தில் சிக்கித் தவிக்கும் மராட்டிய மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 700-ஐயும் நெருங்கி உள்ளது. குஜராத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 425 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 4-வது இடத்தில் இருந்த தமிழகத்தில் புதிதாக 600 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்தது. இதனால் வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 3-வது இடத்துக்கு சென்றது.
4-வது இடத்தில் உள்ள டெல்லியில் 5,980 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு குறைவாக உள்ளன.
Related Tags :
Next Story