மாநிலங்களவையில் பலத்தை அதிகரித்த தேசிய ஜனநாயக கூட்டணி-மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் நீங்குகிறது


மாநிலங்களவையில் பலத்தை அதிகரித்த தேசிய ஜனநாயக கூட்டணி-மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் நீங்குகிறது
x
தினத்தந்தி 20 Jun 2020 10:30 PM GMT (Updated: 20 Jun 2020 7:52 PM GMT)

மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 இடங்களில் 100 உறுப்பினர்களை பெற்றிருப்பதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அதிகரித்து உள்ளது.

புதுடெல்லி,

மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது. ஆனால் அப்போது மாநிலங்களவையில் பா.ஜனதாவுக்கும், அது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் போதிய பெரும்பான்மை இல்லை. அங்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வந்தன.

இதனால் மத்திய அரசின் கனவு திட்டங்களை நிறைவேற்றும் பல மசோதாக்கள் மாநிலங் களவையில் நிறைவேறாமல் போயின. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடந்த மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றிக்கொடி நாட்டியதால் மெல்ல மெல்ல மாநிலங்களவையிலும் அதன் கணக்கு அதிகரிக்க தொடங்கியது.

இந்த சூழலில்தான் கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. உடனே தனது கனவு மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக இந்த 2-வது கட்ட ஆட்சியில் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. குறிப்பாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களை தாக்கல் செய்தது.

இந்த மசோதாக்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமின்றி அ.தி.மு.க., பிஜூ ஜனதா தளம் போன்ற நட்பு கட்சிகளும் ஆதரவளித்தன. அப்படியும் பெரும்பான்மை இல்லாத நேரத்தில் எதிர்க்கட்சிகளின் சில உறுப்பினர்களின் ஆதரவை பெற்று மசோதாக் களை நிறைவேற்றி விட்டது.

இந்த நிலையில் மாநிலங்களவையில் இந்த ஆண்டு காலியான 61 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 42 உறுப்பினர்கள் மார்ச் மாதத்திலேயே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 19 இடங்களுக்கான தேர்தல் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 8 மாநிலங்களில் நடந்த இந்த தேர்தலில் பா.ஜனதா 8 இடங்களை வென்றது. காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை தலா இடங்களை பெற்றன. ஒட்டுமொத்தமாக இந்த 61 இடங்களில் பா.ஜனதா 17, காங்கிரஸ் 9 இடங்களை பெற்று உள்ளன.

இதன் மூலம் மாநிலங்களவையில் பா.ஜனதாவின் பலம் 86 ஆக உயர்ந்திருக்கிறது. காங்கிரசின் பலம் 41 ஆக குறைந்துள்ளது. மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 இடங்களில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலமும் 100 ஆகியுள்ளது. இதைத்தவிர பா.ஜனதாவுடன் நட்பில் இருக்கும் அ.தி.மு.க., பிஜூ ஜனதாதளம் தலா 9 இடங்கள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 6 உறுப்பினர்களை வைத்துள்ளன.

இதனால் மத்திய அரசின் மசோதாக்கள் மாநிலங்களவையில் எவ்வித சிக்கலும் இன்றி நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story