குஜராத்தில் ரூ.4¾ கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது


குஜராத்தில் ரூ.4¾ கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 July 2020 7:52 PM GMT (Updated: 29 July 2020 7:52 PM GMT)

குஜராத்தில் ரூ.4¾ கோடி செல்லாத நோட்டுகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆமதாபாத், 

குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா நகர் பகுதியில் சிலர் கோடிக்கணக்கான செல்லாத ரூபாய் நோட்டுகளை பரிமாற்றம் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு போலீசார் அங்குள்ள மெட் ரோடு பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நடமாடிய பரூக் சோட்டா என்பவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவருக்கு பண பரிமாற்றத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்து, 5 பண்டல்கள் கொண்ட செல்லாத ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவர் அளித்த தகவலின்பேரில் கோத்ரா தாண்டியா பகுதியில் உள்ள முக்கிய குற்றவாளியான இத்ரிஸ் கையாஷ் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்தும், காரில் இருந்தும் கத்தை கத்தையாக மறைத்து வைக்கப்பட்டு இருந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் இத்ரிஸ் கையாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவருடைய மகன் ஜூப்பர் ஹையாத்தை போலீசார் கைது செய்தனர்.

இந்த அதிரடி சோதனையின் மூலம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் அடங்கிய ரூ.4 கோடியே 77 லட்சம் செல்லாத நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. தப்பியோடிய இத்ரிஸ் கையாஷுக்கு ஏற்கனவே இதுபோன்ற பல வழக்குகளில் தொடர்பு இருப்பதாகவும், அவர் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story