ராஜஸ்தான்; காங்.அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது பாஜக


ராஜஸ்தான்; காங்.அரசுக்கு எதிராக  இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது பாஜக
x
தினத்தந்தி 14 Aug 2020 1:55 AM GMT (Updated: 14 Aug 2020 1:55 AM GMT)

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளது.

ஜெய்பூர்,

ராஜஸ்தானில்  ஆட்சி செய்து வரும் அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளது.  ஜெய்பூரில் நேற்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது. 

பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் குலாப் சந்த் கட்டாரியா கூறும் போது, “ ராஜஸ்தானில் சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை ( இன்று) கூடுகிறது. அன்றைய தினமே, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும்” என்றார். 

 ஏற்கனவே,  சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி தனது அரசுக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் திட்டமிட்டுள்ளார்.  அதிருப்தியில் இருந்த சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீண்டும்  சமரசம் அடைந்துள்ளதால், அசோக் கெலாட்டிற்கு பெரும்பான்மை காட்டுவதில் எந்த சிக்கலும் இருக்காது. 

கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 125 எம்.எல்.ஏக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. ராஜஸ்தான் சட்டப்பேரவையின் பலம் 200 ஆகும். 125 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் பெரும்பான்மையை நிரூபித்து அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்த சல சலப்புகளும் இன்றி  ஆட்சியை நடத்த அசோக் கெலாட் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  

அசோக் கெலாட் அரசுக்கு எந்த சிக்கலும் இருக்காது என்பது தெரிந்தும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவையில் விவாதம் நடத்த பாஜக முயல்வதாக கூறப்படுகிறது.  மாநிலத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து  அவையில் விவாதம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Next Story