அகமதாபாத்தை மினி பாகிஸ்தான் என்பதா? சஞ்செய் ராவத் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
இந்நிலையில் அகமதாபாத் நகரை மினி பாகிஸ்தான் என்று கூறிய சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் குஜராத், அகமதாபாத் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது
மும்பை,
நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக தெரிவித்து இருந்தார். நடிகையின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் நடிகைக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.
இந்தநிலையில் நடிகை கங்கனா ரணாவத் மும்பையை பற்றி கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவசேனா மூத்த எம்.பி. சஞ்சய் ராவுத் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இங்கு வசித்து கொண்டு, வேலைபார்த்து கொண்டு யாராவது மும்பை, மராட்டியம் மற்றும் மராத்தியர்கள் குறித்து தவறாக பேசினால், முதலில் நான் அவர்களை மன்னிப்பு கேட்க சொல்லுவேன். மும்பை மினி பாகிஸ்தான் என்று கங்கணா சொல்கியிருக்கிறார். நான் கேட்கிறேன், குஜராத்தின் அகமதாபாத்தை மினி பாகிஸ்தான் என்று சொல்வதற்கு கங்கணாவுக்குத் துணிச்சல் இருக்கிறதா?” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அகமதாபாத் நகரை மினி பாகிஸ்தான் என்று கூறிய சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் குஜராத், அகமதாபாத் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து குஜராத் மாநில பாஜக செய்தித்தொடர்பாளர் பாரத் பாண்ட்யா நேற்று அளித்த பேட்டியில் ' சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அகமதாபாத் நகரை மினி பாகிஸ்தான் என்று அழைத்து மாநிலத்தையும், எங்கள் மாநில மக்களையும் அவமானப்படுத்திவிட்டார். அகமதாபாத் நகரை மினிபாகிஸ்தான் என்று கூறியதறக்கு குஜராத் மக்களிடமும், அகமதாபாத் மக்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story