சிறையில் ஸ்வப்னா சுரேசுக்கு சலுகை வழங்கப்பட்டதா? சிறைத்துறை டி.ஜி.பி. மறுப்பு


சிறையில் ஸ்வப்னா சுரேசுக்கு சலுகை வழங்கப்பட்டதா? சிறைத்துறை டி.ஜி.பி. மறுப்பு
x
தினத்தந்தி 20 Nov 2020 4:08 AM GMT (Updated: 2020-11-20T09:38:32+05:30)

சிறையில் இருக்கும் ஸ்வப்னா சுரேசுக்கு சலுகை வழங்கப்பட்டதா? என்பதற்கு சிறைத்துறை டி.ஜி.பி. மறுத்து உள்ளார்.

பெரும்பாவூர்,

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் வழக்கில் தூதரகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் ஸ்வப்னா சுரேஷ் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் மாநில பா.ஜனதா தலைவர் கே.சுரேந்திரன், சிறைத்துறை டி.ஜி.பி. ருஷிராஜூக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் சிறையில் இருக்கும் ஸ்வப்னா சுரேசை பார்க்க முதல் நாள் 15 பேர் வந்தாகவும், பின்னர் பல்வேறு தரப்பை சேர்ந்த நபர்கள் வந்து அவரை சந்தித்து விட்டு சென்றனர். இதன் மூலம் இந்த வழக்கை திசை திருப்ப கேரள முதல்-மந்திரி மற்றும் நிதி மந்திரி ஆகியோர் முயன்று வருகிறார்கள். அத்துடன் அவருக்கு சிறையில் பல சலுகைகளும் செய்யப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த கடிதம் தொடர்பாக சிறைத்துறை டி.ஜி.பி. ருஷிராஜு விளக்கம் அளித்ததாவது:-

சிறையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து போதிய ஆதாரம் இல்லாமல், அடிப்படை ஆதாரம் இல்லாத தகவலை பா.ஜனதா மாநில தலைவர் தெரிவித்து உள்ளார். எனவே இதுபோன்று ஆதாரம் இல்லாத, தகவல்களை வெளியிட்டு சிறைத்துறை மீது களங்கம் ஏற்படுத்த முயன்றதற்கு வருத்தம் தெரிவித்து, அவருடைய கருத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஸ்வப்னா சுரேசை சந்திக்க விசாரணை அதிகாரிகள் தவிர, அவருடைய தாயார், மகன், மகள், சகோதரி, கணவர் ஆகியோரை தவிர வேறு யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. அத்துடன் சிறையில் அவர்கள், அதிகாரிகள் முன்னிலையில்தான் ஸ்வப்னா சுரேசை பார்த்து பேசி உள்ளனர். அந்த சந்திப்பும் கேமராவில் பதிவாகி உள்ளது. எனவே ஸ்வப்னா சுரேசுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story