இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 20 பேருக்கு கொரோனா பாதிப்பு; பரிசோதனைக்கு காத்திருக்க வேண்டியிருந்ததற்கு எதிர்ப்பு


இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 20 பேருக்கு கொரோனா பாதிப்பு; பரிசோதனைக்கு காத்திருக்க வேண்டியிருந்ததற்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 22 Dec 2020 9:26 PM GMT (Updated: 22 Dec 2020 9:26 PM GMT)

இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்த 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. டெல்லி வழியாக சென்னை வந்த பயணி ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

புதுடெல்லி,

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, சாதாரண கொரோனாவை விட 70 சதவீதம் வேகமாக பரவி வருகிறது. அதனால், நேற்று நள்ளிரவு முதல் 31–ந்தேதிவரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை கண்காணிக்கவும், நேற்று முன்தினமும், நேற்றும் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு விமான நிலையத்திலேயே கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு லண்டனில் இருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்துக்கு ஒரு ஏர் இந்தியா விமானம் வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில், 5 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இன்னொரு விமானத்தை பிடித்து சென்னை விமான நிலையத்துக்கு போய்ச்சேர்ந்த ஒரு பயணிக்கு, அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நேற்று காலை 6 மணிக்கு மற்றொரு விமானம் லண்டனில் இருந்து டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று இரவு மேலும் 2 விமானங்களில் வந்த பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட பயணிகளின் மாதிரிகள், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புதியவகை கொரோனாவை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், தடுப்பூசியின் செயல்திறன் மீது புதிய கொரோனா ஏற்படுத்தும் தாக்கம் குறித்து புரிந்துகொள்ள முடியும் என்று பரிசோதனை மைய நிறுவனர் கவுரி அகர்வால் தெரிவித்தார்.

இதுபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இங்கிலாந்தில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்துக்கு 222 பயணிகள் வந்து சேர்ந்தனர். கொரோனா பரிசோதனை அறிக்கை இல்லாமல் வந்த 25 பயணிகள், தனிமை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். அதில், 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

விமானத்தில் அவர்களுக்கு அருகே பயணம் செய்தவர்களின் விவரங்கள் திரட்டப்பட்டன. அவர்கள் 2 வாரங்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதுபோல், கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள், ஏதேனும் தொற்று அறிகுறி காணப்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் தெலுங்கானாவுக்கு 358 பயணிகள வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெலுங்கானா பொது சுகாதார இயக்குனர் சீனிவாசராவ் தெரிவித்தார்.

தெலுங்கானாவில் புதியவகை கொரோனா பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, இங்கிலாந்தில் இருந்து நேற்று அதிகாலை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு ஒரு ஏர் இந்தியா விமானம் வந்து சேர்ந்தது. அதில், 250 பயணிகளும், 18 சிப்பந்திகளும் வந்தனர். அவர்களிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அதனால் அவர்களை அழைத்துச்செல்ல வந்திருந்த குடும்பத்தினர் காத்திருக்க வேண்டி இருந்தது. 12 மணி நேரத்துக்கு மேலாக பரிசோதனை நீடித்தது. இதனால், பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோல், காத்திருந்த குடும்பத்தினரும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்தில் இருந்து நேரடி விமானத்தில் டெல்லி வந்த பயணிகளில் 6 பேர், கொல்கத்தா வந்தவர்களில் 2 பேர், ஆமதாபாத் வந்த 4 பேர், அமிஸ்தசரஸ் வந்த 8 பேர் என இதுவரை மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.


Next Story