கேரளாவில் சட்டசபையை ஒருநாள் கூட்ட கவர்னருக்கு மீண்டும் கோரிக்கை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Dec 2020 10:48 PM GMT (Updated: 24 Dec 2020 10:48 PM GMT)

கேரளாவில் சட்டசபையை ஒருநாள் கூட்ட கவர்னருக்கு மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள சட்டசபை சிறப்பு கூட்டத்திற்கு கவர்னர் அனுமதி மறுத்துவிட்டார். இந்த நிலையில் சட்டசபை ஒருநாள் கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் நேற்று மீண்டும் கவர்னருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. வரும் 31-ந்தேதி இந்த கூட்டத்தை நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதுபற்றி முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது, ‘‘விவசாயிகள் எதிர்கொள்ளும் தீவிர பிரச்சினைகளை கருத்தில் கொண்டு சூழ்நிலைகளை விளக்கி சட்டசபையை கூட்ட மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

தென்மாநிலங்கள் அதிக அளவில் உணவு தானியங்களுக்காக வடமாநிலங்களை சார்ந்துள்ளன. எனவே விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாமும் பெரிதாக கருத்தில் கொள்ள வேண்டும். இந்த முறை அரசின் கோரிக்கையை கவர்னர் ஏற்பார் என்று நம்புகிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது நாட்டு நடைமுறைதான்’’ என்றார்.

அதே வேளையில் கவர்னரின் நடவடிக்கை சரியானது என்று மாநில பா.ஜ.க.வினர் கூறி உள்ளனர்.

Next Story