கர்நாடகாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்


கர்நாடகாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 22 Jan 2021 10:11 AM GMT (Updated: 22 Jan 2021 10:11 AM GMT)

கர்நாடகா சிவமொக்காவில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம்  சிவமொக்கா மாவட்டத்தின் ஹுனசோடு பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் பாறைகள் உடைக்கும் இடத்தில் ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்து ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக அம்மாநில உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிக அளவிலான ஜெலட்டின் வெடிபொருள்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டிருந்தது. வெடி விபத்திற்கு குவாரி உரிமையாளர் மற்றும் வெடிபொருள் கையாள்பவரின் அலட்சியமும் காரணம்.

இதனால், குவாரி உரிமையாளர் மற்றும் வெடிபொருள் விற்பனையாளர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றார்.

இந்நிலையில் கர்நாடகாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Next Story