சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம்: உதவியுடன் எழுந்து நடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Jan 2021 5:36 AM GMT (Updated: 24 Jan 2021 5:36 AM GMT)

சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது உதவியுடன் எழுந்து நடப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பெங்களூரு, 

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவின் தண்டனை காலம் வருகிற 27-ந் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதாவது காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். அவரை சிறை நிர்வாகம் பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

காய்ச்சல், மூச்சுத்திணறல், ரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் அவரது உடல்நிலை சீரான நிலையில் இருந்தது. அவரது நுரையீரல் நிலை குறித்து பரிசோதனை செய்ய கடந்த 21-ந் தேதி கலாசிபாளையாவில் உள்ள விக்டோரியா மருத்துவனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது நுரையீரலில் தீவிரமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சசிகலா அதே மருத்துவமனையில் தனி வார்டிற்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் கொரோனா மற்றும் மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். அவருக்கு நுரையீரல் பாதிப்பு அதிகமானதை அடுத்து நிமோனியா பாதிப்பும் உண்டானது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றி, டாக்டர்கள் உரிய சிகிச்சையை தொடங்கினர். 

இந்த நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தொற்று அறிகுறிகள் குறைய தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகாவும், அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது. ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு, சர்க்கரை போன்றவை சரியான அளவில் கட்டுக்குள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் ஒரே அறையில் சசிகலாவுடன் இளவரசியும் அடைக்கப்பட்டு இருந்தார். சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவருடன் இருந்த இளவரசிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இந்த நிலையில், நேற்று இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக வக்கீல் அசோகன் தெரிவித்தார். இதையடுத்து இளவரசியும் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சையை டாக்டர்கள் தொடங்கினர். 

இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது உதவியுடன் எழுந்து நடப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் வெளியான தகவலில், சசிகலா உணவு உட்கொள்வதாகவும், சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்றும் அனைத்து சிகிச்சைக்கும் சசிகலா போதிய ஒத்துழைப்பு வழங்குவதாகவும், உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால், அவருக்கு இன்சுலின் வழங்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story