கங்குலி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார் மம்தா பானர்ஜி


கங்குலி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார் மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 28 Jan 2021 2:33 PM GMT (Updated: 28 Jan 2021 2:33 PM GMT)

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 2-ந்தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து ஸ்டெண்ட் குழாய் பொருத்தப்பட்டு ஒரு அடைப்பு அகற்றப்பட்டது. 5 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் கங்குலியை நேற்று மீண்டும் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு உண்டானது. மருத்துவமனையில் அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

சிகிச்சைக்குப் பிறகு கங்குலியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கங்குலி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் சிறந்த முறையில் சிகிச்சை அளித்ததற்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார்.

Next Story