விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும்; மத்திய பட்ஜெட் சலுகைகள் நிறைந்ததாக இருக்கும்; பிரதமர் மோடி சூசக தகவல்


நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பிரதமர் மோடி பேட்டி அளித்தபோது எடுத்த படம்
x
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பிரதமர் மோடி பேட்டி அளித்தபோது எடுத்த படம்
தினத்தந்தி 29 Jan 2021 6:03 PM GMT (Updated: 30 Jan 2021 5:45 AM GMT)

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் சலுகைகள் நிறைந்ததாக இருக்கும் என்று பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சூசக தகவல்
கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தால் தொழில்துறை முடங்கியது. அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். எனவே, பொருளாதாரத்துக்கு புத்துயிருட்டும் வகையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்தடுத்து ஊக்குவிப்பு சலுகைகளை அறிவித்தார்.

தற்சார்பு இந்தியாவை அடைய அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி திட்டங்களும் அவற்றில் அடங்கும்.

இந்த சலுகைகளை ‘மினி பட்ஜெட்’ என்று வர்ணித்துள்ள பிரதமர் மோடி, இந்த ஆண்டு மத்திய பட்ஜெட், அதே போன்று சலுகை நிறைந்ததாக இருக்கும் என்று சூசகமாக தெரிவித்தார்.

பொன்னான வாய்ப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, நேற்று காலையில் பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய புத்தாண்டின் முதலாவது கூட்டத்தொடர் தொடங்க போகிறது. முதல் தொடரே பட்ஜெட் கூட்டத்தொடராக அமைந்து விட்டது. சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க பொன்னான வாய்ப்பு, நாட்டுக்கு கிடைத்துள்ளது.

ஆக்கப்பூர்வமான விவாதம்
இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு இந்த புத்தாண்டு முக்கியமானது. இதை மனதில் கொண்டு, நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும். வெவ்வேறு கருத்துகளை முன்வைக்கும்போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டு மக்களின் உணர்வுகளை பூர்த்தி செய்வதற்காக நாடாளுமன்றத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் கடமையில் இருந்து எம்.பி.க்கள் விலகிச்செல்லக்கூடாது.

மினி பட்ஜெட்
இந்திய வரலாற்றில் முதல் முறையாக, சலுகை தொகுப்பு என்ற பெயரில் கடந்த ஆண்டு நான்கு, ஐந்து மினி பட்ஜெட்களை நிதி மந்திரி தாக்கல் செய்ய வேண்டியதாகி விட்டது.

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட், அந்த மினி பட்ஜெட் வரிசையில் ஒன்றாகவே பார்க்கப்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Next Story