இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது


இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 19 Feb 2021 11:21 PM GMT (Updated: 19 Feb 2021 11:21 PM GMT)

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை நேற்று 1 கோடியை தாண்டியது.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஆரம்பத்தில் தடுப்பு மருந்தோ, தடுப்பூசிகளோ இல்லை. இதனால் கடிவாளம் இல்லா குதிரையாக உலகின் நாலாபக்கமும் தனது கொடூர கரத்தை விரித்த அந்த வைரஸ், அதில் சிக்கிய அனைவரையும் வாரிச்சுருட்டியது.

அப்படி கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை பல கோடிகளில் அமைந்து விட்டது. அதைப்போலவே தன்னிடம் அகப்பட்டவர்களில் பலரின் உயிரை கபளீகரமும் செய்து விட்டது. உலகம் முழுவதும் கொரோனாவால் மாண்ட உயிர்களின் எண்ணிக்கையோ பல லட்சங்களை தாண்டியது.

தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணிகள் ஒருபுறம் நடந்து வந்த நிலையில், மறுபுறம் பிற நாடுகள் கண்டுபிடித்த தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இதன் பலனாக ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கியது.

இதைப்போல இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை, உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான புனேயை சேர்ந்த சீரம் மருந்து நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்துள்ளது.

இந்த 2 தடுப்பூசிகளும் பலகட்ட சோதைகளை முடித்திருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டன. பின்னர் இந்த தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் மிகப்பெரிய திட்டமும் தொடங்கப்பட்டது.

கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக டாக்டர்கள், ராணுவத்தினர், சுகாதார பணியாளர்கள் என 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. ஒரு நபருக்கு 2 டோஸ்கள் தடுப்பூசி போட வேண்டும் என்பதால் கடந்த 13-ந் தேதி முதல், முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி தற்போது போடப்பட்டு வருகிறது.

அடுத்ததாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. இதுவரை 1 கோடியே 1 லட்சத்து 88 ஆயிரத்து 7 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 6 லடசத்து 58 ஆயிரத்து 674 பேருக்கு தடுப்பூசி போட்ப்பட்டுள்ளன.


Next Story