பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரசார் போராட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு:  மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரசார் போராட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2021 8:05 AM GMT (Updated: 20 Feb 2021 8:05 AM GMT)

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜெய்ப்பூர்,

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

அதிலும் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து, ரூ.100.13-க்கு விற்பனை செய்யப்பட்டது. ராஜஸ்தானில் கடந்த மாதம் வாட் வரி ரூ.2 குறைக்கப்பட்ட நிலையிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.  ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் காங்கிரசார் நடந்து சென்றும், டிராக்டர்களில் பேரணியாக சென்றும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.  ஜெய்ப்பூரில் பெட்ரோல் மற்றும் டீசல் முறையே லிட்டர் ஒன்றுக்கு ரூ.97.10 மற்றும் ரூ.89.44 என விற்பனை செய்யப்படுகிறது.

முதலில் கியாஸ் சிலிண்டருக்கான மானியத்திற்கு பா.ஜ.க.வினர் முடிவு கட்டினர்.  எரிபொருள் விலையை தற்பொழுது உயர்த்தி உள்ளனர்.  விவசாயிகளை ஒருபுறமும், மக்களை மறுபுறமும் வாட்டி வருகின்றனர் என காங்கிரஸ் மந்திரி கச்சாரியாவாஸ் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

இதேபோன்று மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மத்திய பிரதேசத்தில் அரை நாள் பந்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

போபாலில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டர் ஒன்றுக்கு ரூ.98.60 மற்றும் ரூ.89.23 என விற்பனை செய்யப்படுகிறது.

Next Story