உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: மேலும் 5 உடல்கள் மீட்பு: மொத்த எண்ணிக்கை 67 ஆக உயர்வு


உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: மேலும் 5 உடல்கள் மீட்பு: மொத்த எண்ணிக்கை 67 ஆக உயர்வு
x
தினத்தந்தி 20 Feb 2021 7:02 PM GMT (Updated: 20 Feb 2021 7:02 PM GMT)

உத்தரகாண்ட் சாமோலி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்த 67 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டேராடூன், 

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் ஜோஷிடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ந் தேதி திடீரென உடைந்ததால் பெரும் பனிச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் அலெக்நந்தா ஆற்றில் பெரும் பிரளயமே ஏற்பட்டது.

இதனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த ரிஷிகங்கா நீர்மின் நிலையம் முற்றிலுமாக அடித்துச்செல்லப்பட்டது. மேலும் தபோவன்-விஷ்ணுகாட் அனல்மின் நிலைய சுரங்கங்கள் சேதமடைந்தன. இதனால் அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதுடன், சுரங்கங்களிலும் சிக்கிக்கொண்டனர்.

இந்த பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை ராணுவம், தேசிய-மாநில பேரிடர் மீட்புப்படை என மிகப்பெரும் மீட்புக்குழுவினர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு-பகலாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிருடன் இருந்தவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை மொத்தம் 62 உடல்கள் மீட்கப்பட்டிருந்தன. இவற்றில் 28 சடலங்கள் அடையாளம் காணப்பட்டன. மேலும்,வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் உத்தரகாண்ட் சாமோலி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்த 67 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதன்படி சாமோலி மாவட்டத்தில் நேற்று தபோவனில் அணையின் குப்பைகளில் இருந்து மேலும் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை மொத்தம் 67 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் டிஜிபி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

Next Story