தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்துக்கு மட்டும் மத்திய படைகள் அனுப்பப்பட்டதா? தேர்தல் கமிஷன் விளக்கம் + "||" + Central Police Forces routinely sent to poll-bound states, not just Bengal: Election Commission

மேற்கு வங்காளத்துக்கு மட்டும் மத்திய படைகள் அனுப்பப்பட்டதா? தேர்தல் கமிஷன் விளக்கம்

மேற்கு வங்காளத்துக்கு மட்டும் மத்திய படைகள் அனுப்பப்பட்டதா? தேர்தல் கமிஷன் விளக்கம்
மேற்கு வங்காளத்துக்கு மட்டும் மத்திய படைகள் அனுப்பப்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்திகளுக்கு தேர்தல் கமிஷன் நேற்று விளக்கம் அளித்து உள்ளது.
சட்டசபை தேர்தல்
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்கள் பெரும்பாலும் ஏப்ரலில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி 
மத்திய படைகளை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய படைகள்
அதன்படி இந்த மாநிலங்களில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 250 கம்பெனி (சுமார் 25 ஆயிரம் வீரர்கள்) மத்திய ஆயுதப்படைகளை (சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.எப்., சி.ஐ.எஸ்.எப்., ஐ.டி.பி.பி.) உள்துறை அமைச்சகம் அனுப்புகிறது. இதில் மேற்கு வங்காளத்தில் மத்திய படைகள் பணியை தொடங்கி விட்டன.
இது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது மேற்கு வங்காளத்தை மட்டும் தனிமைப்படுத்தி முன்கூட்டியே மத்திய படைகளை அனுப்பி வைத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக அரசியல் கட்சியினரும் அதிருப்தியை வெளியிட்டு இருந்தன.

வழக்கமான நடைமுறை
இந்த சர்ச்சைக்கு தேர்தல் கமிஷன் நேற்று விளக்கம் அளித்து உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய படைகளை அனுப்புவது வழக்கமான நடைமுறைதான். இது 1980-களில் இருந்தே பின்பற்றப்படுகிறது.

தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நிலவரத்தை கட்டுக்குள் வைப்பதற்கு குறிப்பாக பதற்றம் நிறைந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த படைகள் அனுப்பப்படுகின்றன. அரசியல் கட்சிகள், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் மேற்படி பதற்றத்துக்குரிய இடங்கள் அடையாளம் காணப்படுகின்றன.

ஒரேநாளில் உத்தரவு
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது கூட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது கூட, சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் மத்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் மத்திய படைகள் அனுப்புவது தொடர்பாக அந்தந்த மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரேநாளில் அதாவது கடந்த 16-ந்தேதிதான் உத்தரவு போடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.