மும்பை ஓட்டலில் பிணமாக மீட்கப்பட்ட எம்.பி. தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா? போலீசார் தீவிர விசாரணை


மோகன் தேல்கார்
x
மோகன் தேல்கார்
தினத்தந்தி 23 Feb 2021 9:28 PM GMT (Updated: 23 Feb 2021 9:28 PM GMT)

மும்பை ஓட்டலில் பிணமாக மீட்கப்பட்ட சுயேச்சை எம்.பி. தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் ஒப்படைப்பு
குஜராத் எல்லையையொட்டி உள்ள யூனியன் பிரதேசமான தாத்ராநகர் ஹவேலி தொகுதி சுயேச்சை எம்.பி.யாக இருந்தவர் மோகன் தேல்கார் (வயது58). இவர் நேற்று முன்தினம் மதியம் மும்பை, மெரின் டிரைவ் பகுதியில் உள்ள ஓட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். மேலும் அவரது அறையில் இருந்து தற்கொலை கடிதமும் கைப்பற்றப்பட்டது. மேலும் எம்.பி. தங்கியிருந்த ஓட்டலில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் எம்.பி. உடல் பிரேத பரிசோதனை மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் நடந்தது. பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு?
இதற்கிடையே பிரேத பரிசோதனையில் எம்.பி. மோகன் தேல்கார் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மூச்சுதிணறலால் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். எனினும் போலீசார் எம்.பி.யின் உடல் மாதிரிகளை தடயவியல் பரிசோதனைக்காக பத்திரப்படுத்தி உள்ளனர்.

இதேபோல எம்.பி.யின் 15 பக்க தற்கொலை கடிதத்தையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த கடிதத்தில், சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளால் அவருக்கு அநீதி, அவமதிப்பு ஏற்படுத்தப்பட்டதாக எம்.பி. கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து மோகன் தேல்கார் எம்.பி. கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களின் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story