கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை எதிர்த்து முழு பலத்துடன் அரசு போராடுகிறது - பிரதமர் மோடி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 May 2021 3:16 AM GMT (Updated: 15 May 2021 3:16 AM GMT)

கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை எதிர்த்து முழு பலத்துடன் அரசு போராடுகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி, 

‘பி.எம்.கிசான்’ திட்டத்தின் 8-வது தவணையாக 9½ கோடி விவசாயிக்கு தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி வங்கிக்கணக்குகளில் செலுத்தும் நிகழ்ச்சி, காணொலி காட்சி வழியாக நேற்று நடந்தது.

இந்த விழாவில் பேசுகையில் பிரதமர் மோடி கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் பற்றி விரிவாக குறிப்பிட்டார். அப்போது பேசிய அவர், “நூற்றாண்டுக்கு ஒரு முறை வருகிற பெருந்தொற்றுநோய், உலகுக்கே சவாலாக அமைந்துள்ளது. ஏனெனில் இது நம் முன்னே கண்ணுக்குத் தெரியாத எதிரியாக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அரசு முழுபலத்துடன் போராடுகிறது. நாட்டின் வலியைக் குறைப்பதற்காக அரசின் ஒவ்வொரு துறையும் இரவு பகலாக பணியாற்றி வருகின்றன. விரைவாக இன்னும் இன்னும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் ஒன்றுபட்டு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இதுவரை ஏறத்தாழ 18 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். நாடு முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் முறை வரும்போது தடுப்பூசிக்கு பதிவு செய்ய வேண்டும். எல்லா நேரங்களிலும் கொரோனா கால நடத்தைகள் பின்பற்றப்பட வேண்டும்.

கொரோனாவுக்கு எதிராக பாதுகாத்துக்கொள்வதற்கு தடுப்பூசி முக்கியமான வழிமுறை ஆகும். மேலும் இது கடுமையான நோய் அபாயத்தைக்குறைக்கும். இந்த கடினமாக தருணத்தில் ஆயுதப் படைகள், ஆக்சிஜன் வினியோகத்தை உறுதி செய்வதற்கு முழு பலத்துடன் செயல்படுகின்றன. ரெயில்வே துறையும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குகிறது. நாட்டின் மருந்துத்துறை பெரிய அளவில் மருந்துகளைத் தயாரித்து வினியோகித்து வருகின்றன.

கடினமான தருணங்களில் நம்பிக்கையை இழக்கிற நாடு இந்தியா இல்லை. இந்த சவாலை கடுமையான வலிமையுடனும், அர்ப்பணிப்புடனும் நாடு சமாளிக்கும். கிராமப்புறங்களிலும் கொரோனா பரவுகிறது. அந்தந்த பகுதிகளில் முறையான விழிப்புணர்வையும், சுகாதாரத்தையும் கிராம பஞ்சாயத்துகள் உறுதி செய்யவேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Next Story