மோதலில் ஈடுபட்ட மந்திரியை ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும்: கோவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Jun 2021 11:31 PM GMT (Updated: 1 Jun 2021 11:31 PM GMT)

தமிழக நிதி அமைச்சருடன் மோதலில் ஈடுபட்ட மந்திரியை, ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோவா எம்.எல்.ஏ.வான சுதின் தாவலிக்கர் வலியுறுத்தி உள்ளார்.

பனாஜி, 

கடந்த மாதம் 28-ந் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், கோவா மாநில போக்குவரத்துத் துறை மந்திரி மாவின் கோடின்கோ, மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை அடுத்து, ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருந்து மந்திரி மாவின் கோடின்கோவை மாநில அரசு நீக்க வேண்டும் என்று மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி எம்.எல்.ஏ. சுதின் தாவலிக்கர் வலியுறுத்தியுள்ளார்.

பனாஜியில் நேற்று நிருபர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நலம் குன்றி இருந்தபோது கோடின்கோ ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்டார். கோவா மாநிலத்தின் சார்பில் அவரே தற்போதும் தொடர்கிறார். மாறாக, நிதித்துறை பொறுப்பை கையில் வைத்திருக்கிற முதல்-மந்திரிதான் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மிகவும் தகுதிவாய்ந்த தமிழக நிதி அமைச்சருடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டதன் மூலம் கோடின்கோ கோவா மாநிலத்துக்கு மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளார்.

இழப்பீட்டுத் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியது, நிதி பெற்றே ஆக வேண்டிய சூழலில் கோவா இருப்பதைக் காட்டுகிறது என்று எம்.எல்.ஏ. சுதின் தாவலிக்கர் கூறினார்.


Next Story