காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பாஜக கவுன்சிலர் உயிரிழப்பு


காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பாஜக கவுன்சிலர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 2 Jun 2021 6:26 PM GMT (Updated: 2 Jun 2021 6:26 PM GMT)

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பாஜக கட்சியை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் உயிரிழந்தார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள், அரசியல்வாதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ட்ரல் நகராட்சியில் கவுன்சிரலாக செயல்பட்டுவந்தவர் ராகேஷ் பண்டிடா சோம்நாத். பாஜக-வை சேர்ந்த ராகேஷ் பண்டிடா சோம்நாத் ஸ்ரீநகரில் வசித்து வந்தார். அவருக்கு போலீசார் தரப்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராகேஷ் பண்டிடா சோம்நாத் தனது நண்பர் முஸ்டக்யூ பட் என்பவரை சந்திக்க இன்று ட்ரல் நகருக்கு சென்றார். ட்ரல் நகருக்கு சென்ற சோம்நாத் தனக்கு பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டிருந்த போலீசாரை அழைத்து செல்லவில்லை.

ட்ரல் நகரில் தனது நண்பர் முஸ்டக்யூ பட் வீட்டில் சோம்நாத் இருந்த அந்த வீட்டிற்குள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள் சிலர் சோம்நாத் மற்றும் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் சோம்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முஸ்டக்யூ பட்டின் மகளுக்கும் காயம் ஏற்பட்டது.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சோம்நாத்தின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story