பா.ஜனதாவுக்கு மாற்றாக முன்னிறுத்த காங்கிரஸ் கட்சியில் அனைத்து மட்டங்களிலும் சீர்திருத்தங்கள் அவசியம்: கபில்சிபல்


பா.ஜனதாவுக்கு மாற்றாக முன்னிறுத்த காங்கிரஸ் கட்சியில் அனைத்து மட்டங்களிலும் சீர்திருத்தங்கள் அவசியம்: கபில்சிபல்
x
தினத்தந்தி 13 Jun 2021 7:35 PM GMT (Updated: 13 Jun 2021 7:35 PM GMT)

பா.ஜனதாவுக்கு வலிமையான அரசியல் மாற்றாக தன்னை முன்னிறுவத்துவதற்கு, காங்கிரஸ் கட்சி அனைத்து மட்டங்களிலும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் கூறினார்.

தொடர் தோல்வி
காங்கிரஸ் கட்சி கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின், தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. எனவே கட்சியின் அமைப்புகளில் மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியம் என மூத்த 
தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இது தொடர்பாக கடந்த ஆண்டு 23 தலைவர்கள் கட்சி தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். இது அப்போது கட்சிக்குள் பெரும் புயலை ஏற்படுத்தி இருந்தது.இந்த 23 பேரில் ஒருவரான முன்னாள் மத்திய மந்திரி கபில்சிபல், தற்போது மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தி உள்ளார். குறிப்பாக பா.ஜனதாவுக்கு எதிராக சரியான மாற்றாக முன்னிறுத்துவதற்கு கட்சியில் சீர்திருத்தங்கள் அவசியம் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

கட்டமைக்க தவறியது
சமீபத்திய 5 மாநில தேர்தல்களில் கட்சி அடைந்திருக்கும் தோல்வியை தொடர்ந்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:-

சமீபத்திய தேர்தலில் அசாமில் ஏ.ஐ.யு.டி.எப் மற்றும் மேற்கு வங்காளத்தில் ஐ.எஸ்.எப். ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. ஏனெனில் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை இனவாதம் நாட்டுக்கு சமமான ஆபத்து என்பதை கட்டமைக்க காங்கிரஸ் தவறிவிட்டது. இதுவும் சட்டசபை தேர்தலில் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும்.தற்போதைய நிலையில் பா.ஜனதாவுக்கு மாற்றாக வலிமையான அரசியல் மாற்று இல்லை. எனவேதான் எனது கட்சியில் (காங்கிரஸ்) சில சீர்திருத்தங்கள் அவசியம் வேண்டும் என நான் கூறுகிறேன். இதன் மூலம்தான் நாடு ஒரு வலிமையான மற்றும் நம்பகமான எதிர்க்கட்சியை பெறும்.

சீர்திருத்தங்கள் வேண்டும்
மீண்டும் எழுச்சி பெற்ற காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவுக்கு தேவை. அதற்காக சுறுசுறுப்பான, நிகழ்காலம்-விழிப்புணர்வு மற்றும் அர்த்தமுள்ளதாக ஈடுபடும் மனநிலையில் இருப்பதை கட்சி வெளிப்படுத்த வேண்டும்.இதற்கு கட்சி இன்னும் கணக்கிடக்கூடிய ஒரு சக்தியாக இருப்பதாகவும், மந்த நிலை இனியும் இல்லை என்பதைக் காட்டவும், கட்சியின் மத்திய மற்றும் மாநில மட்டங்களில் அமைப்பு முறையில் பரவலான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்றை மோடி அரசு திறமையற்ற முறையில் கையாண்டு வருகிறது. ஆட்சி செய்வதற்கான தார்மீக உரிமையை பிரதமர் மோடி இழந்து விட்டார்.

வெற்றிகரமாக செயல்படுவோம்
எனவே நாட்டில் தற்போதைய சூழலில் காங்கிரசால் ஒரு சிறந்த மாற்றை உருவாக்க முடியும். தொற்றை எதிர்கொண்டதில் மத்திய அரசின் தோல்வியால் நாடு முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் உள்ள வேதனைகள் ஆகியவற்றை குறைக்க வேண்டும்.நாட்டின் நலனுக்காக ஒரு மாற்று வழிமுறையை காங்கிரஸ் வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகளில் நாங்கள் வெற்றிகரமாக செயல்படுவோம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு கபில்சிபல் கூறினார்.

Next Story