காஷ்மீரில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு உறுதி


காஷ்மீரில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 23 Jun 2021 8:36 PM GMT (Updated: 2021-06-24T02:06:02+05:30)

காஷ்மீரில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீநகர்,

சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. இந்தியாவில் அந்த வகையில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்த டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, இந்த டெல்டா வைரஸ் தற்போது உருமாறி உள்ளது. உருமாறிய டெல்டா வைரஸ் டெல்டா-பிளஸ் என அழைக்கப்படுகிறது. டெல்டா பிளஸ் அல்லது AY.1 என அழைக்கப்படும் இந்த வகை உருமாறிய வைரஸ், எளிதாக பரவக்கூடியது, நுரையீரல் அணுக்களுடன் எளிதாக தாக்கக்கூடியது, தொற்று பாதித்தவருக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கு எதிராக செயல்படுவது, வைரஸை அழிக்கக் கூடிய எதிர்ப்பணுக்களை மீறி செயல்படும் தன்மைகளைக் கொண்டது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துளளது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா பிளஸ்  வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், காஷ்மீரிலும் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரின் ரீஸி என்ற மாவட்டத்தில் உள்ள கத்ரா நகரத்தில் ஒரு நபருக்கு இந்த டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த நபர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அங்குள்ள அரசு கல்லூரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Next Story