உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் தேர்தல்களில் தனித்து போட்டி - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவிப்பு


உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் தேர்தல்களில் தனித்து போட்டி - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2021 9:23 PM GMT (Updated: 27 Jun 2021 9:23 PM GMT)

உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இதுவரை 4 முறை உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். தற்போது உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. 

இதற்கிடையில் கடந்த 2019 மக்களவைத் தோதலின்போது அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி மற்றும் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் போட்டியிட்டது. அப்போது மாயாவதியின் கட்சிக்கு அதிகபட்சமாக 10 இடங்களிலும், சமாஜவாதி கட்சிக்கு 5 இடங்களில் வெற்றி கிடைத்தது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக பெரும்பாலான இடங்களில் வென்றது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோதலில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிலைப்பாடு குறித்த தகவலை மாயாவதி வெளியிட்டுள்ளார். அதில், “ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியுடன் இணைந்து பகுஜன் சமாஜ் கட்சி தோதலைச் சந்திக்க இருக்கிறது என்று சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அவை முற்றிலும் தவறானது. உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தோதலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிட இருக்கிறது. எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பஞ்சாப் மாநிலத்துக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும் மாயாவதி கூறியுள்ளாா். பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் பகுஜன் சமாஜ் அண்மையில் கூட்டணி அறிவித்தது நினைவுகூரத்தக்கது

Next Story