வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட மத்திய அரசின் அனுமதி ஏன் தேவைப்படுகிறது? மராட்டிய அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி


வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட மத்திய அரசின் அனுமதி ஏன் தேவைப்படுகிறது? மராட்டிய அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 29 Jun 2021 7:46 PM GMT (Updated: 29 Jun 2021 7:46 PM GMT)

வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட மத்திய அரசின் அனுமதி ஏன் தேவைப்படுகிறது என மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

வீடு, வீடாக தடுப்பூசி
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடந்த விசாரணையின் போது மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட முடியாது என மத்திய அரசு ஐகோர்ட்டில் கூறியது. இதையடுத்து வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடுமாறு ஐகோர்ட்டு மாநில அரசிடம் கூறியது.இந்தநிலையில், மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி தீபான்கர் தத்தா, ஜி.எஸ். குல்கா்னி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது மாநில அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், முழுமையாக எழுந்து நடக்க முடியாதவர்கள், படுத்தப்படுக்கையாக இருப்பவர்களுக்கு சோதனை முயற்சியாக வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடுவதை தொடங்க முடியும் என கூறியிருந்தது. எனினும் இந்த திட்டத்துக்கு முதலில் மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தது.

ஐகோர்ட்டு கேள்வி
இதையடுத்து நீதிபதிகள், "உங்களுக்கு ஏன் அனுமதி தேவை?. சுகாதாரம் மாநில அரசிடமும் உள்ளது. மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய பிறகு தான் மாநில அரசு எல்லாவற்றையும் செய்கிறதா?. கேரளா, பீகார், ஜார்கண்ட் போன்ற 
மாநிலங்கள் மத்திய அரசிடம் அனுமதி பெறுகிறதா?" என கேள்வி எழுப்பினர்.

பின்னர் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

Next Story