உத்தரகாண்ட்டில் புதிய முதல்-மந்திரி, அமைச்சரவை பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 July 2021 1:38 PM GMT (Updated: 4 July 2021 1:38 PM GMT)

உத்தரகாண்ட்டில் இன்று புதிதாக பதவியேற்றுக்கொண்ட முதல்-மந்திரி மற்றும் அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரியாக இருந்த தீரத்சிங் ராவத் பதவியேற்று ஆறு மாதத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாக முடியாத சூழல் ஏற்பட்டதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, டேராடூனில் நேற்று நடந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பா.ஜ.க. சட்டமன்றக் கட்சித் தலைவராகவும், புதிய முதலமைச்சராகவும் புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநில கவர்னரைச் சந்தித்த புஷ்கர் சிங் தாமி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பின்னர், சட்டமன்ற உறுப்பினர்களின் கடிதத்தைப் பரிசீலித்த கவர்னர், பதவியேற்க வருமாறு புஷ்கர் சிங் தாமிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், புதிய முதல்-மந்திரியாக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உத்தரகாண்ட் மாநில கவர்னர் பேபி ராணி மௌரியா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்-மந்திரியை தொடர்ந்து, புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. இந்த விழாவில் பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில் உத்தரகாண்ட்டில் இன்று புதிதாக பதவியேற்றுக்கொண்ட முதல்-மந்திரி மற்றும் அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இன்று பதவியேற்ற புஷ்கர் சிங் தாமி மற்றும் அவரது அமைச்சரவையில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் செழிப்பை நோக்கி அவர்கள் பணியாற்றுவதால் இந்த அணிக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். 




Next Story