தேசிய செய்திகள்

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 70 பேர் பரிதாப சாவு; மோடி இரங்கல் + "||" + Lightning kills 68 across Rajasthan, UP, MP; PM Modi announces Rs 2 lakh ex gratia for kin

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 70 பேர் பரிதாப சாவு; மோடி இரங்கல்

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 70 பேர் பரிதாப சாவு; மோடி இரங்கல்
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
32 பேர் காயம்
உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் பல இடங்களில் மின்னல் தாக்கி பெரும் சேதம் விளைந்துள்ளது. அந்த வகையில் 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 32 பேர் பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதைப்போல ஏராளமான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

பிரயாக்ராஜில் 14 பேர்
இதில் முக்கியமாக பிரயாக்ராஜ் மாவட்டத்தில் மட்டுமே 14 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தோரில் 3 சிறுவர்கள், 3 சிறுமிகள், 3 பெண்கள் மற்றும் ஒரு முதியவரும் அடங்குவர். மேலும் 4 பேர் தீக்காயமடைந்துள்ளனர். அத்துடன் 6 எருமைகள் மற்றும் 5 ஆடுகளும் மின்னலுக்கு இரையாகி இருக்கின்றன.மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.இதைப்போல கவுஷாம்பி மாவட்டத்தில் 4 பேர், பதேப்பூர், கான்பூரில் தலா 5 பேர், உன்னாவ், பெரோசாபாத்தில் தலா இருவர், அரையா, ஹமிர்பூர், பண்டா, சோன்பத்ரா, சண்டாலி, ரேபரேலி, பிரதாப்கர், சுல்தான்பூர், மிர்சாபூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 41 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

யோகி ஆதித்யநாத் இரங்கல்
இந்த சம்பவங்கள் குறித்த தகவல் அறிந்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடும் அதிர்ச்சியும், சோகமும் வெளியிட்டு உள்ளார். மின்னல் தாக்கியதால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அவர் அறிவுறுத்தி உள்ளார்.மேலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிவாரண உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்குமாறும் உத்தரவிட்டு உள்ளார்.அத்துடன் மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்து உள்ளார்.

ராஜஸ்தானிலும் சோகம்
இதற்கிடையே ராஜஸ்தானிலும் மின்னல் தாக்கியதில் 23 பேர் பலியாகி உள்ளனர். இதில் ஜெய்ப்பூரில் மட்டுமே 12 பேர் இறந்துள்ளனர். சம்பவத்தின்போது அங்குள்ள அம்பர் கோட்டையில் உள்ள பார்வையாளர் கோபுரத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் அவர்கள் உயிரிழந்தனர். மின்னல் தாக்கியதால் கோபுரமே இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.மீதமுள்ள 11 பேரும் கோட்டா, ஜலவார், பரன், தோல்பூர், சாய்மதோபூர், தோங்கி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.மேலும் மாநிலத்தின் பல பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 27 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 16 விலங்குகளும் உயிரிழந்திருப்பதாக மாநில உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்குவதற்காக மாநில அரசு ரூ.1.65 கோடியை நிவாரணமாக ஒதுக்கியுள்ளது. இதுபோல் மத்திய பிரதேசத்திலும் மின்னல் தாக்கி 6 பேர் பலியாகி உள்ளனர்.

பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
இதைப்போல உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் 41 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அறிந்து பிரதமர் மோடியும் கடும் வேதனை வெளியிட்டு இருந்தார்.உத்தரபிரதேசம் மட்டுமின்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் மின்னல் தாக்கி பலர் உயிரிழந்த சம்பவங்களால் அவர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.மேலும் மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ள மோடி, பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் அறிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் அளிவித்திருப்பதாக பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அமரிந்தர் சிங் காங்கிரசை காயப்படுத்த மாட்டார்; கெலாட் நம்பிக்கை
கேப்டன் அமரிந்தர் சிங் கட்சியின் மரியாதைக்குரிய தலைவர் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
2. உத்தரபிரதேசம்: பெண் பணியாளர்களை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி
உத்தரபிரதேசத்தில் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் பெண் பணியாளர்களை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
3. ராஜஸ்தானில் நீட் தேர்வில் முறைகேடு; 8 பேர் கைது
ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்த விவகாரத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4. உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: கட்சியினருடன் பிரியங்கா காந்தி ஆலோசனை
உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை நடைபெற்றது.
5. உத்தரபிரதேசம்: சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் பலி
உத்தரபிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் விளையாடிக்கொண்டிருந்த 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.