டெல்லிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை; இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


டெல்லிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை; இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Aug 2021 4:26 AM GMT (Updated: 21 Aug 2021 4:26 AM GMT)

டெல்லியில் பெய்து வரும் மழையை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.



புதுடெல்லி,

டெல்லி, அரியானா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பருவமழையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தீவிர மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில், டெல்லியில் இன்று  அதிகாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரை தொடர்ச்சியாக மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

டெல்லி சப்தர்ஜங் பகுதியில் 73.2 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகி இருந்தது.  ஆசாத் மார்க்கெட் பகுதியில் கனமழை பெய்து 1.5 அடி அளவுக்கு நீர் தேங்கி காணப்படுகிறது.  இதனால் இந்த வழி மூடப்படுகிறது என டெல்லி போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.  ஆசாத்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று, டெல்லியின் பிரகதி மைதான், லஜ்பத் நகர் மற்றும் ஜங்புரா பகுதிகள், ஐ.டி.ஓ. ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து உள்ளது.  இதனால் வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.

மூல்சந்த் பகுதியில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.  இதனால் அந்த வழியே செல்லும் வாகனங்கள் நீரில் மிதந்தபடியே செல்ல வேண்டி இருந்தது.  இதனை தொடர்ந்து வாகன போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.  நீர் தேங்கிய சூழலில் மின்டோ பிரிட்ஜ் பகுதியில் உள்ள சாலை மூடப்பட்டு உள்ளது என்றும் டெல்லி போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.

டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.  டெல்லியின் நொய்டா நகரிலும் மழை பெய்து வருகிறது.  டெல்லியில் இன்று மித அளவிலான மழை பெய்யும் என்றும் அறிவித்து உள்ளது.  


Next Story