தினசரி கொரோனா பாதிப்பு 38 ஆயிரமாக உயர்வு 369 பேர் பலி


தினசரி கொரோனா பாதிப்பு 38 ஆயிரமாக உயர்வு 369 பேர் பலி
x
தினத்தந்தி 9 Sep 2021 12:10 AM GMT (Updated: 9 Sep 2021 12:10 AM GMT)

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38 ஆயிரமாக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் நேற்று 369 பேர் பலியாகினர்.

புதுடெல்லி,

இந்தியா, கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து போராடி வருகிறது.

இந்தநிலையில் தினசரி கொரோனா பாதிப்பில் ஏற்ற இறக்கம் நிலவுகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 31 ஆயிரத்து 222 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இது 37 ஆயிரத்து 875 ஆக அதிகரித்தது.

இதனால் மொத்த பாதிப்பும் 3 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய பாதிப்பில் கேரளாவுக்கு மட்டுமே 68.04 சதவீத பங்கு இருக்கிறது.

பலியும் அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்த மீள முடியாத நிலையில் நேற்று முன்தினம் 290 பேர் பலியான நிலையில் நேற்று இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்தது. காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 369 பேர் தொற்றால் உயிரிழந்தனர்.

இதுவரை இந்த தொற்றின் பாதிப்பினால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்து 411 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கேரளாவில் 189 பேர் உயிரிழந்தனர். மராட்டியத்தில் தொற்றால் 86 பேர் பலியாகினர்.

அந்தமான் நிகோபார், பீகார், சத்தீஷ்கார், தத்ராநகர்ஹவேலி டாமன் டையு, கோவா, குஜராத், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், லடாக், லட்சத்தீவு, மத்திய பிரதேசம், மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் ஒருவரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் கொரோனா பலி விகிதம் 1.33 சதவீதமாக நீடிக்கிறது.

39 ஆயிரம் பேர் குணம்

நேற்று புதிதாக 37 ஆயிரத்து 875 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும். அதாவது 39 ஆயிரத்து 114 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

இதுவரையில் மொத்தம் 3 கோடியே 22 லட்சத்து 64 ஆயிரத்து 51 பேர் தொற்றில் இருந்து வெற்றிகரமாக குணம் அடைந்துள்ளனர். குணம் அடைவோர் விகிதம் 97.48 சதவீதம் ஆகும்.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவு

கொரோனாவில் இருந்து மீள்வதற்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றும் குறைந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கையில் 1,608 குறைந்தது. இதனால் நாட்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 3 லட்சத்து 91 ஆயிரத்து 256 ஆக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.18 சதவீதம்தான்.

இந்த புள்ளி விவரங்கள் மத்திய சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

Next Story