பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு முடிவு


பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு முடிவு
x
தினத்தந்தி 1 Oct 2021 8:34 PM GMT (Updated: 1 Oct 2021 8:34 PM GMT)

பலமுறை சம்மன் அளித்தும் நேரில் ஆஜராகாத முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கையை கோர்ட்டு தொடங்கி உள்ளது.

மும்பை,

மும்பை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். இதில் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் பார்கள், ஓட்டல்கள் மூலம் ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் மாமூல் வசூலிக்குமாறு மும்பை போலீசாரை கட்டாயப்படுத்தியதாக கூறியிருந்தார்.

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பதவியை ராஜினமா செய்த அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பண மோசடி வழக்கில் அனில் தேஷ்முக்கின் தனி செயலர் சஞ்சீவ் பாலாண்டே மற்றும் தனி உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோரை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இந்தநிலையில் பண மோசடி வழக்கில் அனில் தேஷ்முக்கை நேரில் ஆஜராக அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்தநிலையில் பண மோடி வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், அனில் தேஷ்முக் மீது இந்திய தண்டனை சட்டம் 174-ன் (அரசு ஊழியர்கள் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை) கீழ் நடவடிக்கை எடுக்க கோரி கடந்த வாரம் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.

இந்த பிரிவின் கீழ் ஒரு மாத சிறை தண்டனையோ அல்லது ரூ.500 அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படலாம்.

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு நேரில் ஆஜராகாத அனில் தேஷ்முக் மீது நடவடிக்கை எடுக்கும் நடைமுறையை தொடங்கி உள்ளது.


Next Story