நாடு முன்னோக்கி செல்வதற்கு மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி வகுத்து கொடுத்த பாதையில் செல்ல வேண்டும்


நாடு முன்னோக்கி செல்வதற்கு மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி வகுத்து கொடுத்த பாதையில் செல்ல வேண்டும்
x
தினத்தந்தி 2 Oct 2021 5:22 PM GMT (Updated: 2 Oct 2021 5:22 PM GMT)

நாடு முன்னோக்கி செல்வதற்கு மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி வகுத்து கொடுத்த பாதையில் செல்ல வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி, பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த, அவர்களது உருவப்படத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

உண்மை, அகிம்சை மூலமாக நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்து உலகத்திற்கு முன்மாதிரியாக இருந்தவர் மகாத்மா காந்தி ஆவார். ஆங்கிலேயேர்களுக்கு எதிராக அவர் போராடுவதற்கு கையில் எடுத்த ஆயுதம் தான் அகிச்சை ஆகும். அதனால் தான் உலகமெங்கும் மகாத்மா காந்திக்கு உயரிய மரியாதையும், மதிப்பும் கிடைக்கிறது. அவர் நமக்கு வகுத்து கொடுத்த வழிகாட்டுதலின்படி நாம் ஒவ்வொருவரும் நடக்க வேண்டியது அவசியம் இருக்கிறது.

சுதந்திரத்திற்கு பின்பு நாடும், நாட்டு மக்களும் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி பெரிய கனவு கண்டு இருந்தார். அதன்படி, கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும் என்று மகாத்மா காந்தி கூறி வந்தார். உழைக்கும் நபர்களின் கையில் வேலை இருந்தால், அவர்கள் நல்ல நிலைக்கு வர முடியும். மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

மகாத்மா காந்தியை போல, இந்த நாடு பார்த்த மற்றொரு முக்கிய தலைவர் லால் பகதூர் சாஸ்திரி ஆவார். அவர் ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதி ஆவார். நேர்மைக்கு பெயர் பெற்றவர். நேர்மைக்கு மற்றொரு பெயர் உண்டு என்றால், அது லால்பகதூர் சாஸ்திரி ஆவார். கர்நாடகத்துடன் மிகவும் நெருக்கம் கொண்டவர். ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற கோஷமிடுவதன் மூலம் விவசாயிகள், ராணுவ வீரர்களுக்கு மரியாதை கொடுத்தவர். அலமட்டி அணைகட்டுவதற்கு காரணமாக இருந்தவர் தான் லால்பகதூர் சாஸ்திரி.

நாடு முன்னோக்கி செல்வதற்கு மகாத்மா காந்தியும், லால்பகதூர் சாஸ்திரி வகுத்து கொடுத்த பாதையில் நாம் ஒவ்வொருவரும் செல்ல வேண்டும். அவர்கள் இந்த நாட்டுக்காக செய்த தியாகத்தை ஒவ்வொருவரும் நினைத்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story