ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்க மூத்த வக்கீல்கள் முன்வர வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்


ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்க மூத்த வக்கீல்கள் முன்வர வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Oct 2021 6:08 PM GMT (Updated: 2 Oct 2021 6:08 PM GMT)

ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்க மூத்த வக்கீல்கள் முன்வர வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி, 

தேசிய சட்ட உதவிகள் ஆணையத்தின் சட்ட விழிப்பு குறித்த 6 வார பிரசார தொடக்கவிழா டெல்லி விஞ்ஞான பவனில் நேற்று நடைபெற்றது. அதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று பேசியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு வக்கீல்கள் தங்களின் சிறிது நேரத்தை ஒதுக்கி, ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்க முன்வர வேண்டும். காந்தியின் கொள்கைகள் சட்டத்துறையினருக்கு இன்றும் பொருந்துவதாக உள்ளன. எளிய மக்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் சேவைகளை அளித்துவரும் தேசிய சட்ட உதவிகள் ஆணையத்தின் பணிகள் பாராட்டுக்குரியவை.

இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய சட்ட உதவிகள் ஆணையத்தின் பிரசாரக் கையேட்டையும் அவர் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சட்டமும், அதுசார் அமைப்புகளும் அனைவருக்குமானது என்ற உணர்வை உருவாக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் மக்களின் நம்பிக்கையே அதன் அமைப்புகளை உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது. ஜனநாயகத்தின் தன்மை என்பது தரமான நீதி வழங்குவதை கொண்டு மதிப்பிடப்படுகிறது.

ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜீயத்தின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஓரிரு நாட்களில் ஒப்புதல் அளிக்கும் என சட்டத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story