வேளாண் சட்டங்களை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள் - எதிர்க்கட்சிகள் மீது மோடி கடும் தாக்கு


வேளாண் சட்டங்களை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள் - எதிர்க்கட்சிகள் மீது மோடி கடும் தாக்கு
x
தினத்தந்தி 2 Oct 2021 8:51 PM GMT (Updated: 2 Oct 2021 8:51 PM GMT)

விவசாய சீர்திருத்தங்களை அரசியல் காரணமாக எதிர்க்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி ஆவேச தாக்குதல் தொடுத்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு விவசாய சீர்திருத்தங்கள் என்ற பெயரில் 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களை விவசாய அமைப்புகள் எதிர்த்து டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்துகின்றன. இந்த சட்டங்களை எதிர்க்கட்சிகள் முழுமூச்சுடன் எதிர்க்கின்றன.

இந்தநிலையில், பிரதமர் மோடி, ஓப்பன் என்ற ஆங்கில பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அவரிடம் வேளாண் சட்டங்கள் பற்றியும், போராடும் விவசாய அமைப்புகள் வலியுறுத்தியும், அவற்றை அரசு திரும்ப மறுப்பது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மோடி விரிவாக பதில் அளித்து கூறியதாவது:-

பல தசாப்தங்களுக்கு (தசாப்தம் என்பது 10 ஆண்டுகள்) முன்பாக மக்கள் பெற்றிருக்க வேண்டிய நன்மைகள், இன்னும் அவர்களை வந்தடையவில்லை. இந்த நாடும், நாட்டு மக்களும் பெற்றிருக்க வேண்டிய விஷயங்களுக்காக இனியும் காத்திருக்க வைக்கக்கூடிய சூழலில் இந்தியா விடக்கூடாது.

இதற்காக பெரிய முடிவுகள் எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் கடினமான முடிவுகளும் எடுக்கப்பட வேண்டும்.

விவசாய அமைப்புகளின் போராட்டங்களைப் பொறுத்தமட்டில் ஆரம்பத்தில் இருந்தே, அவர்களுடன் உட்கார்ந்து பேசுவதற்கும், அவர்களுக்கு உடன்பாடு இல்லாத குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கவும் தயார் என்று அரசு கூறி வந்துள்ளது.

இது தொடர்பாக பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இன்று வரை இந்த குறிப்பிட்ட அம்சத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, இதை மாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என இதுவரை யாரும் வரவில்லை.

வேளாண் சட்டங்களைப் பொறுத்தவரையில், எல்லாவழிகளிலும் நமது நாட்டின் சிறிய விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்க எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவான சீர்திருத்தங்களை இனன்றைக்கு எதிர்ப்பவர்கள் யார்?

அவர்கள் (எதிர்க்கட்சிகள்) அறிவுசார் நேர்மையில்லாதவர்கள், அரசியல் வஞ்சம் கொண்டிருப்பவர்கள், அறிவுசார் நேர்மையின்மை, அரசியல் வஞ்சம் என்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தத்தை நீங்கள் பார்க்க முடியும்.

அவர்கள், நாங்கள் இப்போது செய்துள்ள அதே செயலை (விவசாய சீர்திருத்தங்கள்) செய்யுமாறு, அன்றைக்கு மாநில முதல்-மந்திரிகளுக்கு கடிதங்களை எழுதியவர்கள்தான். நாங்கள் கொண்டு வந்துள்ள அதே சீர்திருத்தங்களை செய்வோம் என்று தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவர்கள்தான், அவர்கள்.

ஆனாலும் மக்கள் விருப்பத்தால் ஆசி பெற்ற வேறு ஒரு அரசியல் கட்சி (பா.ஜ.க.) அதே சீர்திருத்தங்களை செய்கிறபோது, அவர்கள் அப்படியே முற்றிலுமாய் பல்டி அடிக்கிறார்கள். அறிவுசார் நேர்மையின்மையை காட்டுகிறார்கள். விவசாயிகள் என்ன பலன் அடைவார்கள் என்பதை விட்டு விட்டு, தங்களுக்கு அரசியல் ரீதியாக என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கிறார்கள்.

நான் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறேன். ஏனென்றால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு விமர்சனங்கள் உதவியாக இருக்கும்.

நேர்மையான மனதுடன், விமர்சகர்களை நான் பெரிதும் மதிக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விமர்சகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. பெரும்பாலும் குற்றச்சாட்டுகளை மட்டுமே சிலர் முன் வைக்கிறார்கள். இதற்கு காரணம், விமர்சனங்களை செய்ய வேண்டும் என்றால் அதற்காக நிறைய கடின வேலைகள் செய்ய வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும். இன்றைய அவசரமான உலகத்தில், அதற்கான நேரம் அவர்களுக்கு இல்லை. எனவே சில நேரங்களில் விமர்சனங்களை நான் இழக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அவர் எடுத்து வைத்த கருத்துகள் இவை:-

* இந்தியா ஒரே ஒரு அரசியல் மாதிரியைத்தான் பார்த்து இருக்கிறது. பதவியில் இருக்கிற அரசுகள், அடுத்த தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அரசுகளை இயக்கி இருக்கிறார்கள். எனது அடிப்படை சிந்தனை மாறுபட்டது. ஒரு அரசை நடத்துவதின் நோக்கம், நாட்டை கட்டியெழுப்புவதுதான் என்பதில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். எனது நோக்கம், நாட்டை வெற்றி பெறச்செய்வதற்கு அரசை இயக்குவதுதான்.

* சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு திட்டம், எழைகளுக்கு கழிவறை கட்டித்தரும் திட்டம், டிஜிட்டல் பண பரிமாற்றம் செய்தல் பற்றி சொல்வதானால், இந்தியாவின் அரசியல் வர்க்கத்தின் பல பிரிவினரும், மக்களை அரசின் அதிகாரத்தைக் கொண்டே பார்க்கிறார்கள். ஆனால் நான் மக்கள் சக்தியைக் கொண்டே பார்க்கிறேன் என்பதை சொல்லியாக வேண்டும். அதன் வெளிப்பாடுதான் இந்த திட்டங்கள்.

* கொரோனா பெருந்தொற்று நோயைக் கையாள்வது தொடர்பாக அரசுக்கு எதிரான விமர்சனங்கள் வருகின்றன. எப்படியாயினும், சிலருக்கு (எதிர்க்கட்சிகள்) எண்ணமெல்லாம் எப்படி நாட்டின் பெயரைக் கெடுப்பது என்பதில்தான் இருக்கிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றைப் பொறுத்தமட்டில் அது உலகளாவிய கொடிய நோய். இதுபோன்ற எதிர்மறை பிரசாரங்கள் இருந்தபோதிலும், எல்லா நாடுகளும் சம அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

* கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இந்தியா கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம், ஒற்றுமையாக, பொது நோக்கத்துக்காக ஒன்றுபட்டு, தேவை ஏற்படுகிறபோது, வழங்குகிற மிகப்பெரிய திறனைக் கொண்டுள்ளோம் என்பதுதான். ஆரம்பத்தில் பி.பி.இ. என்கிற சுய பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்தோம். ஆனால் இப்போது இதில் இந்தியா உலகளாவிய மிகப் பெரிய உற்பத்தியாளராக மாறி இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி வந்திருக்காவிட்டால் நிலைமை என்ன ஆகி இருக்ககும் என்று கற்பனை செய்து பாருங்கள். உலகில் பெரும்பாலான மக்கள் இன்னும் கொரோனா தடுப்பூசியை அடைய முடியவில்லை என்பதை நாம் அறிவோம். இன்றைக்கு, தடுப்பூசியில் நமது வெற்றிக்காக, இந்தியாவின் சுயசார்புக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story