போதை விருந்து விவகாரம்: கைதானவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்- மத்திய மந்திரி வலியுறுத்தல்


போதை விருந்து விவகாரம்: கைதானவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்- மத்திய மந்திரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Oct 2021 12:37 PM GMT (Updated: 3 Oct 2021 12:42 PM GMT)

மும்பை சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாரூக்கானின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தானே,

மும்பையில் இருந்து கோவாவிற்கு சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இக்கப்பலில் போதை  விருந்து நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் தலைமையில் அதிகாரிகள் அந்த சொகுசு கப்பலில் சாதாரண பயணிகள் போன்று டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர்.

கப்பல் மும்பையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் பார்ட்டி ஆரம்பமானது. பார்ட்டியில் கஞ்சா, கோகைன் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்ததை அடுத்து அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள், போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட  13 பேரை பிடித்தனர். பிடிபட்ட அனைவரிடமும் 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, போதை விருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், பாலிவுட் திரையுலகம் போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் மராட்டியம் மற்றும் மும்பையை போதைப்பொருள் இல்லாத இடமாக மாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார். 


Next Story