தடுப்பூசிக்காக காத்திருக்க வேண்டாம்: பள்ளிக்கூடங்களில் தொற்று பரவும் வாய்ப்பு குறைவு - உலக வங்கி சொல்கிறது


தடுப்பூசிக்காக காத்திருக்க வேண்டாம்: பள்ளிக்கூடங்களில் தொற்று பரவும் வாய்ப்பு குறைவு - உலக வங்கி சொல்கிறது
x
தினத்தந்தி 3 Oct 2021 8:45 PM GMT (Updated: 3 Oct 2021 8:45 PM GMT)

பள்ளிக்கூடங்களில் தொற்று பரவும் வாய்ப்பு குறைவு தான். ஆகவே தடுப்பூசிக்காக நாடுகள் காத்திருக்க வேண்டாம் என்று உலக வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுடெல்லி,

சீனால் உருவான கொரோனா வைரஸ் தொற்று பரவலால், கடந்த ஆண்டு உலகமெங்கும் 188 நாடுகளில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. இதனால் 160 கோடி குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியவில்லை. இதனால் அவர்கள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு குறைந்தது. என்னதான், ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டாலும் நேரில் பெறுவதைப்போன்ற கற்றல் அனுபவம் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஏழை நாடுகளில் கிராமப்புற மாணவர்களுக்கு இன்னும் ‘ஸ்மார்ட் போன்’ வசதி எட்டாக்கனியாகத்தான் உள்ளது.

இப்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் இந்தியா உள்பட பல நாடுகளில் பள்ளிக்கூடங்களை திறந்து வகுப்புகளை நடத்தத் தொடங்கி உள்ளனர். இருப்பினும், பள்ளிக்கூடங்களை இன்னும் திறக்காத நாடுகளும் இருக்கின்றன.

இதையொட்டி உலக வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாக பள்ளிக்கூடங்களை திறந்த நாடுகள் உண்டு. அங்கு சமுதாயப் பரவல்தான் இருந்தது. பள்ளிக்கூட ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது பள்ளிக்கு நேரில் பாடங்களை கற்பிக்க செல்வதில் ஏற்படும் அச்சத்தைப் போக்கும். என்றாலும் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு மாணவர்களும், ஊழியர்களும் பரவலாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை காத்திருக்க வேண்டியதில்லை.

* தகுந்த கொரோனா தணிப்பு யுக்திகளுடன் திறந்துள்ள பள்ளிக்கூடங்கள் மூலம் கிடைத்துள்ள அனுபவங்களால், பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு தொற்று பரவல் ஆபத்து குறைவாகவே இருக்கிறது என உலக வங்கியின் கல்விக்குழு கண்டறிந்துள்ளது.

* இளம் குழந்தைகள் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகிற, தொற்று பாதித்து இறக்கிற வாய்ப்புகள் குறைவு என்றே சான்றுகள் கூறுகின்றன. பள்ளிக்கூடங்களில் தொற்று பரவும் வாய்ப்பு குறைவுதான். குறிப்பாக தொடக்க பள்ளிகளிலும், அங்கன்வாடிகளிலும் கொரோனா பரவ வாய்ப்பு மிகக்குறைவு.

* பள்ளிக்கூடங்களை தொடர்ந்து மூடி வைத்திருப்பதால், கொரோனா தொற்று பரவும் ஆபத்தை இல்லாமல் செய்துவிடும். ஆனால், குழந்தைகள் கற்றுக்கொள்வதிலும், அவர்களின் மன நலத்திலும், ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் அது பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

* தற்போது உலகமெங்கும் 80 சதவீதம் அளவில் வழக்கம்போல பள்ளிக்கூடங்கள் திறந்து வகுப்புகள் நடைபெறுகின்றன. 54 சதவீத ஆசிரியர்கள் நேரில் வந்து பாடம் கற்பிக்கின்றனர்.

* எங்கெல்லாம் அரசாங்கங்கள், சமூகங்கள், ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களைத் திறந்தால் கொரோனா பரவுவதற்கு கூடுதல் வாய்ப்பாகி விடும் என அஞ்சுகின்றனரோ, அங்குதான் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

* வயது வந்தோரை விட 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தாக்க வாய்ப்பு குறைவு. அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவவும் வாய்ப்புகள் குறைவுதான்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story