போராட்டக்காரர்கள் மீது கார் மோதியதால் ஆத்திரம் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை; 8 பேர் சாவு


போராட்டக்காரர்கள் மீது கார் மோதியதால் ஆத்திரம் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை; 8 பேர் சாவு
x
தினத்தந்தி 4 Oct 2021 12:02 AM GMT (Updated: 4 Oct 2021 12:02 AM GMT)

உத்தரபிரதேசத்தில் துணை முதல்-மந்திரிக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கார் மோதியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் லகிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா அந்த மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரை சேர்ந்தவர் ஆவார். இந்த கிராமத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அண்டை கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். கறுப்புக்கொடிகள் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக பா.ஜனதாவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. அத்துடன் அதில் இருந்தவர்கள் விவசாயிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிகிறது.

இந்த கார் மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

அந்த காரில் மத்திய மந்திரியின் மகன் மற்றும் உறவினர்கள் இருந்ததாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

இதனால் பெரும் ஆத்திரமடைந்த விவசாயிகள் வன்முறையில் இறங்கினர். அந்த கார்களை அடித்து உடைத்து தீயிட்டு கொளுத்தியதுடன், அதில் இருந்தவர்களையும் பலமாக தாக்கினர்.

அத்துடன் மந்திரியை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை அடித்து உடைத்தனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல மாறியது.

இந்த வாகன மோதல் மற்றும் வன்முறை சம்பவங்களில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண்குமார் சிங் கூறினார். அத்துடன் பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா தனது பயணத்தை ரத்து செய்தார்.

இந்த நிலையில் திகுனியாவில் பெரும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அத்துடன் அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த வன்முறை சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநில போலீஸ் டி.ஜி.பி. முகுல் கோயல், அங்கு சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்காக கூடுதல் டி.ஜி.பி. பிரசாந்த் குமாரை உடனடியாக அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் இருந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அவரை கைது செய்யவும், அஜய் மிஸ்ராவை பதவி நீக்கவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்து உள்ளனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை அஜய் மிஸ்ரா மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

லகிம்பூர் கேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தர இருந்த துணை முதல்-மந்திரியை அழைத்து வருவதற்காக பா.ஜனதா தொண்டர்கள் கார்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவற்றின் மீது விவசாயிகள் கல் வீசியதால் நிலைதடுமாறி வாகனம் ஒன்று கவிழ்ந்தது.

இதில் 2 விவசாயிகள் காருக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர். உடனே ஆத்திரமடைந்த விவசாயிகள் அந்த காருக்குள் இருந்த 3 பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் டிரைவரை அடித்துக்கொன்றனர்.

அந்த காரில் எனது மகன் இல்லை. அவர் துணை முதல்-மந்திரி பங்கேற்கும் நிகழ்ச்சி அரங்கில் இருந்தார். அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோ பதிவும் என்னிடம் உள்ளன. நான் முழுவதும் துணை முதல்-மந்திரியுடனே இருந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களால் லகிம்பூர் கேரியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

லகிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. அத்துடன் இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தவும் வலியுறுத்தி உள்ளன.

Next Story