வெளிநாடுகளில் சொத்துக்கள்: சட்ட விதி மீறல்கள் எதுவும் இல்லை-தெண்டுல்கர் தரப்பு விளக்கம்


வெளிநாடுகளில் சொத்துக்கள்: சட்ட விதி மீறல்கள் எதுவும் இல்லை-தெண்டுல்கர் தரப்பு விளக்கம்
x
தினத்தந்தி 4 Oct 2021 8:21 AM GMT (Updated: 4 Oct 2021 8:28 AM GMT)

சச்சினின் முதலீடுகள் வரித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சட்ட விதி மீறல்கள் எதுவும் இல்லை என அவரது வக்கீல் விளக்கம் அளித்து உள்ளார்.

புதுடெல்லி

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பல ஆயிரம் கோடி பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக பண்டோரா பேப்பர்ஸ் என்ற அமைப்பு இணையத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்கள், மன்னர்கள், பிரதமர்கள், அவர்களின் குடும்பத்தினர் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் பல்லாயிரம் கோடிக்கணக்கில் பணம் பதுக்கியிருப்பதாக பண்டோரா பேப்பர்ஸ் என்ற அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.

சுமார் 600 செய்தியாளர்களை இணைத்துள்ள இந்த அமைப்பு 14 நிதிச் சேவை அமைப்புகளிடமிருந்து கசிந்த சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தியது.  90 நாடுகளைச் சேர்ந்த 330 தலைவர்கள் வெளிநாடுகளில் பல கோடி ரூபாய்கள் பதுக்கி வைத்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 500 இந்தியர்களின் பெயர்களும் இதில் வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இம்ரான்கானுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இம்ரான்கான் அமைச்சரவையில் நிதி மந்திரியான பயாஸ் அகமது கரீப், அவரது குடும்பத்தினர் மற்றும் சில மந்திரிகள் கோடிக்கணக்கான பணத்தில் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை ரகசியமாக வைத்திருப்பது தெரிய வந்தது.

ஜோர்டான் மன்னர் அப்துல்லா வெளிநாடுகளில் ரூ.745 கோடிக்கு சொத்து குவித்ததற்கான ஆவணங்களும் வெளியாகி உள்ளது. அவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 14 ஆடம்பர பங்களாக்களை ரகசியமாக வாங்கி உள்ளார். மேலும் 38 போலி கம்பெனிகளை உருவாக்கி உள்ளார்.

செக்குடியரசு பிரதமர் ஆந்த்ரே பேபிஸ் பிரான்சின் தெற்கு பகுதியில் ரூ.163 கோடி மதிப்பில் ஆடம்பரமான சொத்துக்களை வாங்கி இருந்ததும் தெரிய வந்தது. இந்த சொத்துக்களை அவர் முறையாக தெரிவிக்காததும் அந்த ஆவணத்தில் இடம் பெற்று உள்ளது.

இந்த வார இறுதியில் செக் குடியரசில் தேர்தல் நடக்கிறது. இந்தநேரத்தில் அவரது பெயர் பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் இடம் பெற்றது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

அஜர்பைஜான் அதிபர் இல்காம் அலியேனின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இங்கிலாந்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்களை ரகசியமாக வாங்கி உள்ளனர்.

கென்யா அதிபர் உஹுரு கென்யாட்டா மற்றும் அவரது குடும்பத்தினர் ரகசியமாக வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

ரஷிய அதிபர் புதினின் பெயர் நேரடியாக அடிபடவில்லை என்ற போதும் அவருடைய உதவியாளர்கள் பெயர்கள் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளன.

மேலும், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், ஆப்பிரிக்காவின் சீஷெல் தீவு, ஹாங்காங் மற்றும் மத்திய அமெரிக்காவின் பெலிஸ் உள்ளிட்ட கடல்சார் தீவுகளை தங்கள் புகலிடமாகப் பயன்படுத்தி கொண்டு சட்டவிரோதமாக முதலீடுகள் செய்து, வரிஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பண்டோரா ஆவணங்களில் குறைந்தது 380 இந்தியர்கள் உள்ளனர். இதில், ஆங்கில பத்திரிகை ஒன்று  இதுவரை சுமார் 60 முக்கிய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்து உறுதிப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் தலைவர் - தொழில் அதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது உறவினர்கள் ஜெர்சி, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் குறைந்தது 18 வெளிநாட்டு நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள்.

பண்டோரா பேப்பர்ஸ் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும்  முன்னாள் மத்திய மந்திரி  ஆகியோரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நடிகர் ஜாக்கி ஷெராப் நியூசிலாந்தில் முதலீடு செய்து உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

பண்டோரோ பேப்பர்ஸ் விவகாரத்தில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் வெளிநாடுகளில் கோடிக் கோடியாக பணம் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சச்சின் தெண்டுல்கரின் வழக்கறிஞர், சச்சினின் முதலீடுகள் வரித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சட்ட விதி மீறல்கள் எதுவும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Next Story