பெங்களூருவில் கடந்த 10 மாதங்களில் 3 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்


பெங்களூருவில் கடந்த 10 மாதங்களில் 3 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Oct 2021 9:56 PM GMT (Updated: 17 Oct 2021 9:56 PM GMT)

கடந்த 10 மாதங்களில் பெங்களூருவில் ரூ.45 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனாலும் ஆண்டுதோறும் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த 7-ந் தேதி வரை பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.45 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 4,210 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றி பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“பெங்களூரு நகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த 7-ந் தேதி வரை போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதாக 4,210 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். 3,337 பேர் மீது வழக்குப்பதிவு ஆகி உள்ளது. இவர்களிடம் இருந்து ரூ.45 கோடி மதிப்பிலான 3,255 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 2020-ம் ஆண்டு 3,912 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

3,673 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 2,766 பேர் மீது வழக்குப்பதிவு ஆகி இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு 1,053 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 1,260 பேர் கைது செய்யப்பட்டனர். 768 வழக்குகள் பதிவாகி இருந்தது. 2019-ம் ஆண்டை விட 2020-ம் ஆண்டில் போதைப்பொருள் விற்பனை 271 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதனை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story