கோட்டயம் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான பரிதாபம்


கோட்டயம் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 19 Oct 2021 8:01 AM GMT (Updated: 19 Oct 2021 8:01 AM GMT)

கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சோக சம்பவம் தெரியவந்துள்ளது.

கேரளாவில் கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, ஆலப்புழை, எர்ணாகுளம், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

தொடர் மழை காரணமாக கோட்டயம் மாவட்டம் குட்டிக்கல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பிளாப்பள்ளி, காவாலி ஆகிய பகுதிகளில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீடுகள் தரைமட்டமானது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 13 பேரும் உயிரோடு மண்ணுக்கு புதைந்து பலியானார்கள்.

இதைத்தொடர்ந்து முப்படையினரின் உதவியுடன் இரவு, பகல் பாராமல் தீவிரமாக மீட்பு பணி நடந்தது.

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கிளாரம்மா (வயது 63), அவரது மகன் மார்ட்டின் (48), மார்ட்டின் மனைவி ஷினி (45), மகள்கள் ஸ்னேகா (14), சோனா (12) சாந்த்ரா (10) ஆகிய 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

மேலும் மரணம் அடைந்த சிசலி (50), வேணு (48), சோனியா (45), அவரது மகன் ஜோபி (15), ராஜம்மா (64), ஷாலட் (29), சரசம்மா (58) ஆகிய 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. பின்னர் இவர்களின் உடல்கள் கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் காஞ்சிரப்பள்ளி அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை நடந்தது. பிறகு உடல்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

இது குறித்து மந்திரி வாசவன் கூறுகையில், கோட்டயம் நிலச்சரிவில் சிக்கி பலியான 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலத்த மழையை தொடர்ந்து குட்டிக்கல் புனித ஜார்ஜ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் 48 குடும்பங்களை சேர்ந்த 148 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் இதுவரை 27 பேர் மரணம் அடைந்துள்ளனர் என தெரிவித்தனர்.

Next Story