பாழடைந்த கட்டிடத்தில் கோர்ட்டுகள் செயல்படுகின்றன: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா


பாழடைந்த கட்டிடத்தில் கோர்ட்டுகள் செயல்படுகின்றன: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா
x
தினத்தந்தி 23 Oct 2021 10:04 PM GMT (Updated: 23 Oct 2021 10:04 PM GMT)

பாழடைந்த கட்டிடத்தில் கோர்ட்டுகள் செயல்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா வேதனை தெரிவித்து உள்ளார்.

பாழடைந்த கட்டிடத்தில் கோர்ட்டு

மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் கிளைக்கான புதிய கட்டிட திறப்பு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

பல கோர்ட்டுகளில் முறையான வசதிகள் இல்லை என்ற கசப்பான உண்மையை சந்தித்து வருகிறோம். இந்த வெற்றியால் (புதிய கட்டிடம்), ஏற்கனவே உள்ள பிரச்சினைகள் நமது கண்ணுக்கு தெரிந்துவிடாமல் போய்விடாது. சில கோர்ட்டுகள் பாழடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. நீதி கிடைப்பதற்கான வழியை மேம்படுத்த நீதி துறை உள்கட்டமைப்பு முக்கியமானதாகும். நீதித்துறை உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் மேம்பாடு திட்டமிடப்படாமல், தேவையான சமயத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருவதை புரிந்து கொள்ள முடியவில்லை.

உள்கட்டமைப்பு ஆணையம்

அவுரங்காபாத் ஐகோர்ட்டு கிளை கட்டிடம் கூட 2011-ம் ஆண்டே திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்ற 10 ஆண்டுகள் ஆகியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. சுதந்திரம் பெற்றது முதல் நீதித்துறை உள்கட்டமைப்பை திட்டமிடாதது மிகப்பெரிய பிரச்சினை ஆகும். திறன்வாய்ந்த நீதித்துறையால் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முடியும். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறைக்கு தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு ஆணையம் அமைப்பது தொடர்பான திட்டத்தை அனுப்பி உள்ளேன். வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.

கிரிமினல்களும், பாதிக்கப்பட்டவர்களும் மட்டும் தான் கோர்ட்டை அணுகுகிறார்கள் என்ற பொதுவான எண்ணம் உள்ளது. தங்கள் வாழ்நாளில் கோர்ட்டுக்கு சென்றதே இல்லை என்பதை மக்கள் பெருமையாக கருதுகிறார்கள். குடிமக்களின் உரிமைகளை உறுதி செய்ய இந்த எண்ணத்தை நீக்க வேண்டிய நேரம் இது. அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். சாதாரண மனிதன் தனது வாழ்நாளில் பல்வேறு சட்ட பிரச்சினைகளை சந்திக்கிறான். ஒருவர் கோர்ட்டில் முறையிடுவதை தவிர்க்க கூடாது. நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை தான் ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story
  • chat