“20 லட்சம் வேலைவாய்ப்புகள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்” - பிரியங்கா காந்தி தேர்தல் வாக்குறுதி..!


“20 லட்சம் வேலைவாய்ப்புகள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்” - பிரியங்கா காந்தி தேர்தல் வாக்குறுதி..!
x
தினத்தந்தி 31 Oct 2021 12:49 PM GMT (Updated: 31 Oct 2021 12:49 PM GMT)

இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்புகள் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ஆகியவற்றை பிரியங்கா காந்தி தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. மக்களின் ஆதரவை திரட்டுவதற்காகவும் கட்சியை வலுப்படுத்துவதற்காகவும் பிரதிக்யா யாத்திரை நடத்துகிறது. இந்த யாத்திரையின்போது, பாஜக ஆட்சி மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக கருதப்படும் கோரக்பூரில் நடைபெற்ற பிரதிக்யா யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

பாஜக ஆட்சியில் தலித்துகள், நெசவாளர்கள், ஓபிசி மக்கள், ஏழைகள், சிறுபான்மையினர் மற்றும் பிராமணர்கள் மோசமாக நடத்தப்பட்டனர். குரு கோரக்நாத்தின் போதனைகளுக்கு எதிராக யோகி ஆதித்யநாத் ஆட்சி நடத்துகிறார். இந்த அரசு நாள்தோறும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 4.5 ஆண்டுகளாக மாநில அரசு எதையும் செய்யவில்லை.  தேர்தல் நெருங்கும் போது தனது பணிகளை பட்டியலிடுகிறது. யோகி ஜி முதல்-மந்திரி ஆன பிறகு கோரக்பூரை மறந்துவிட்டார். கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது ஆறுகளில் சடலங்கள் மிதந்தன. சுகாதார சேவைகள் மோசமான நிலையில் உள்ளன. 

லக்கிம்பூர் கேரியில் நடந்த விவசாயிகள் படுகொலை, விவசாயிகளின் துயரங்களை காதுகொடுத்து யாரும் கேட்காதது ஆகியவை  இந்த அரசாங்கத்தின் உண்மையான முகத்தை காட்டுகிறது. நாட்டில் விவசாயிகள் படும் துயரங்களைக் கேட்க யாரும் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.32,000 கோடியைத் தவிர, விவசாயக் கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். எங்கள் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும். மீன் வளர்ப்புக்கு விவசாய அந்தஸ்து வழங்குவோம். நெல், கோதுமை ரூ.2,500க்கும், கரும்பு ரூ.400க்கும் எடுக்கப்படும். எங்கள் அரசு இளைஞர்களுக்கு 20 லட்சம் அரசு வேலைகளையும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலையையும் அளிக்கும். பெண்களுக்கு பஸ் பயணம் இலவசம், எந்த நோய் வந்தாலும், 10 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

Next Story