ப.சிதம்பரத்துக்கு எதிரான சி.பி.ஐ. மனு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 Nov 2021 7:28 PM GMT (Updated: 10 Nov 2021 7:28 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு எதிரான சி.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி, 

கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா குழுமம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி பெறுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்தது. இதில் முறைகேடுகள் நடந்ததாக ப.சிதம்பரம் எம்.பி., அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது கடந்த 2017-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. சேகரித்த ஆவணங்களை பார்வையிட ப.சிதம்பரம் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோருக்கு அனுமதி அளித்து தனி கோர்ட்டு கடந்த மார்ச் 5-ந் தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. அதில், விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், ஆவணங்களை பார்க்க அனுமதிப்பது விசாரணையை சீர்குலைத்து விடும் என்று சி.பி.ஐ. கூறியிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி முக்தா குப்தா, சி.பி.ஐ. மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். விசாரணை தொடர்பான ஆவணங்களை பார்க்கவும், நகல்களை பெறவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உரிமை உண்டு என்று நீதிபதி கூறினார்.


Next Story