பா.ஜ.க. ‘வணிகமயம் ஆக்கப்பட்டு விட்டது’! கோவா எம்.எல்.ஏ. கவலை


பா.ஜ.க. ‘வணிகமயம் ஆக்கப்பட்டு விட்டது’! கோவா எம்.எல்.ஏ. கவலை
x
தினத்தந்தி 29 Dec 2021 4:56 AM GMT (Updated: 2021-12-29T10:26:50+05:30)

மறைந்த முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் நடத்திய பாதையில் கட்சி செல்லவில்லை என்று கோவா பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.

பனாஜி,

கோவா பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ தனது மனைவி டெலிலாவை வேட்பாளராக நிறுத்த பாஜகவிடம் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு கட்சியின் சார்பில் போட்டியிட இடம் மறுக்கப்படுவதாக தெரிகிறது. இதனால் அவர் பிற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கோவா பாஜக ‘வணிகமயம் ஆக்கப்பட்டு விட்டது’, மறைந்த  முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் நடத்திய பாதையில் கட்சி செல்லவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, 

“பாஜக வித்தியாசமான கட்சியாக அறியப்பட்டது.ஆனால்  அது வித்தியாசமான கட்சி அல்ல என்பது சமீபகாலங்களில் தெரிந்துள்ளது. கட்சிக்காரர்களுக்கு இப்போது கட்சியில் முக்கியம் கொடுக்கப்படவில்லை.

பாரிக்கரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் கட்சியால் ஓரங்கட்டப்படுகிறார்கள். கட்சிக்குள் மனோகர் பாரிக்கரின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் அவரது நலம் விரும்பிகளை விரும்பாத சில குழுக்கள் கட்சிக்குள் உள்ளன.”

இவ்வாறு மைக்கேல் லோபோ கூறியுள்ளார்.

முன்னதாக கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர், 2019ம் ஆண்டு பதவியில் இருந்தபோது இறந்தார். அதைத் தொடர்ந்து தற்போதைய முதல்வர் பிரமோத் சாவந்த் பதவியேற்றார். பாரிக்கர் மறைந்த நேரத்திலேயே அவருடைய மகன் உத்பலும், “தனது தந்தை வகுத்த பாதையில் கட்சி இப்போது நடக்கவில்லை” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லோபோ 2012ம் ஆண்டு முதல், கலங்குட் சட்டமன்றத் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில், 2022ல் நடக்கவிருக்கும் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட லோபோவுக்கு இடம் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மற்ற அரசியல் கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் உள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மைக்கேல் லோபோ கூறுகையில், “கட்சியில் என்னை விரும்பும் சிலர் உள்ளனர், உயர் பதவியில் உள்ள சிலர் எனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை.அவர்கள் என் நிழலை கண்டு அஞ்சுகிறார்கள்” என்று தெரிவித்தார். 

Next Story