அதிகரிக்கும் கொரோனா.. மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க டெல்லி அரசு உத்தரவு!


அதிகரிக்கும்  கொரோனா.. மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க டெல்லி அரசு உத்தரவு!
x
தினத்தந்தி 6 Jan 2022 3:12 AM GMT (Updated: 6 Jan 2022 3:12 AM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,665- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில்  கொரோனா 3-வது அலை பரவல் தொடங்கி விட்டதாக மருத்துவ நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. ஒமைக்ரான் பரவல் காரணமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் மின்னல் வேகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியிருக்கிறது. தொற்று பாதிப்பு அதிகரிப்பால் இரவு ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்துள்ளது. எனினும், தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகபடுத்தும் நடவடிக்கையில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது.

அதன்படி, டெல்லியில் செயல்படும் 9 அரசு பொது மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு  மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் தற்போது 3,316 ஆக இருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கையை  4,350 ஆக அதிகரிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு பணியாளர்கள் இருக்கின்றனரா, தேவையான அளவுக்கு  மருத்துவ உபகரணங்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்யவும் அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
 
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,665- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு கொரோனா பரவல் விகிதம் 11.88 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story