இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு...!


இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு...!
x
தினத்தந்தி 16 Jan 2022 6:04 AM GMT (Updated: 16 Jan 2022 6:04 AM GMT)

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. புனே சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுகின்றன. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிதான் ஒரே ஆயுதம் என்பதால், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. வீடு வீடாகச் சென்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதுவரை 156.76 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. 

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும், 68 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும், தடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இன்று பிற்பகல் சிறப்பு தபால் தலையை மத்திய அரசு வெளியிடுகிறது.

இதற்கிடையே, முன்னெச்சரிக்கை டோஸ்கள் எனப்படும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் ஜனவரி 10ம் தேதி தொடங்கி நடைபெறுகிது. முதல்கட்டமாக சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த பிரிவில் இதுவரை 43.19 லட்சத்திற்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3,38,50,912 முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.


தடுப்பூசி பணி ஒரு வருடம் நிறைவு குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

உலகிலேயே மிகவும் வெற்றிகரமான தடுப்பூசி இயக்கம் இந்தியாவில்தான் நடைபெறுகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் இது ஒரு மைல்கல் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story