கொரோனா தடுப்பூசி பணி தொடங்கி ஓராண்டு நிறைவு 157 கோடி ‘டோஸ்’ செலுத்தி சாதனை


கொரோனா தடுப்பூசி பணி தொடங்கி ஓராண்டு நிறைவு 157 கோடி ‘டோஸ்’ செலுத்தி சாதனை
x
தினத்தந்தி 16 Jan 2022 11:05 PM GMT (Updated: 2022-01-17T04:35:05+05:30)

கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதைத்தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 157 கோடி டோஸ் செலுத்தி சாதனை படைத்துள்ளதை அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக தடுப்பூசிகள் பேராயுதங்களாக திகழ்கின்றன.

தடுப்பூசி இயக்கத்துக்கு வயது 1

கடந்த ஆண்டு (2021) ஜனவரி 16-ந்தேதி உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கமாக இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கியது. நேற்றுடன் இந்த இயக்கத்துக்கு 1 வயது ஆகி உள்ளது.

முதலில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பிப்ரவரி 2-ந்தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கும், மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய்களுடன் அவதிப்படும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

ஏப்ரல் 1 முதல் 45 வயதானவர்களுக்கு போடப்பட்டது. மே 1-ந்தேதி தொடங்கி 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி விரிவுபடுத்தப்பட்டது.

இந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி முதல் 15-18 வயது பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மேலும் முன்எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் 3-வது டோஸ் தடுப்பூசி கடந்த 10-ந்தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும், இணைநோயுடன் கூடிய 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்தப்படுகிறது.

5 மாநில சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

100 கோடி டோஸ்

9 மாதங்களில் 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஒரே நாளில் 2.51 கோடி தடுப்பூசியும் போடப்பட்டது உண்டு. பல நாட்கள் தினமும் 1 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

100 கோடி டோஸ் தடுப்பூசி என்ற சாதனை கடந்த அக்டோபர் 21-ந்தேதி பதிவானது. 150 கோடி டோஸ் என்ற இலக்கு கடந்த 7-ந்தேதி சாதிக்கப்பட்டது.

நேற்று காலை 7 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 66 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

156.76 கோடி டோஸ்

இதுவரையில் மொத்தம் 156 கோடியே 76 லட்சம் தடுப்பூசிகள் போட்டு சாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் வெற்றிகரமாக தொடருகிறது.

அஞ்சல் தலை வெளியிட்ட மாண்டவியா

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசி போடத்தொடங்கி ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளதை நினைவுகூரும் வகையில், அஞ்சல் தலையை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் காணொலி காட்சி வழியாக கூறும்போது, ‘‘இது இந்தியர்களுக்கும், நாட்டின் தடுப்பூசி திட்டத்தால் வியப்பு அடைகிற ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஒரு பெருமைமிக்க தருணம்’’ என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பாராட்டு

மேலும் அவர் குறிப்பிடுகையில், ‘‘சிலர் தடுப்பூசி திட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தனர். ஆனால் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார். தொடர்ந்து விஞ்ஞானிகளையும், நிறுவனங்களையும் ஊக்குவித்துவந்தார். அதனால் இவ்வளவு பெரிய மக்கள் தொகை இருந்தபோதிலும், 156 கோடி டோஸ்களை செலுத்துகிற மைல்கல்லை இந்தியா அடைய முடிந்தது’’ எனவும் தெரிவித்தார்.

மோடி பெருமிதம்

தடுப்பூசி இயக்கம் தொடங்கி ஓராண்டு ஆனதையொட்டி பிரதமர் மோடி பெருமிதம் வெளியிட்டு உள்ளார். அத்துடன் இந்த பணியில் இணைந்துள்ள அனைவருக்கும் அவர் நன்றியும் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நெறிமுறைகள்

கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு மிகப்பெரிய வலிமையை நமது தடுப்பூசி திட்டம் அளித்து இருக்கிறது. இது உயிர்களை காப்பாற்றவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் வழிவகுத்தது.

கொரோனாவை எதிர்த்து போராடுவதில் இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் அறிவியல் அடிப்படையிலேயே இருக்கும். நமது சக குடிமக்கள் சரியான கவனிப்பை பெறுவதை உறுதிசெய்வதற்காக சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறோம். கொரோனா தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, தொற்றில் இருந்து மீண்டு வருவோம்.

பெருமிதம் கொள்கிறது

இந்த தடுப்பூசி பணியில் இணைந்து செயல்பட்ட ஒவ்வொரு தனிநபரையும் நான் வணங்குகிறேன். நமது டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பங்கு தனித்துவமானது.

தொலைதூரப்பகுதிகளில் தடுப்பூசி போடப்படுவதை பார்க்கும்போது அல்லது நம் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதை காணும்போது​நம் இதயமும் மனமும் பெருமிதம் கொள்கின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அமித்ஷா, ஜே.பி.நட்டா பாராட்டு

தடுப்பூசி பணிகள் ஓராண்டு நிறைவு செய்திருப்பதையொட்டி பிரதமர் மோடிக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘தேச நலனுக்காக அரசும், குடிமக்களும் ஒன்றிணைந்து பொதுவான இலக்கை நிர்ணயித்தால், நாடு சாத்தியமற்றதைக் கடக்க முடியும் என்பதையும், ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்பதையும் பிரதமர் மோடியின் திறமையான தலைமைத்துவம், உறுதிப்பாடு மற்றும் தொடர் முயற்சியின் மூலம் இந்தியா உலகிற்கு எடுத்துக்காட்டி இருக்கிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதைப்போல பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் 92 சதவீதம் பேர் முதல் டோஸ் பெற்றிருப்பதாகவும், இந்தியாவின் தடுப்பூசி பணிகளுக்கு உலகமே எழுந்து நின்று பாராட்டுவதாகவும் அவர் பெருமிதம் வெளியிட்டு உள்ளார்.

Next Story