கர்நாடகா: பெங்களூருவில் வருகிற 31-ந் தேதி வரை 144 தடை நீட்டிப்பு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக வருகிற 31-ந் தேதி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா கோரதாண்டவம் ஆடி வருகிறது. பெங்களூருவில் தினசரி பாதிப்பு 20 ஆயிரமாக உள்ளது. பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி, சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வருகிற நாளை (19-ந் தேதி) காலை 5 மணியுடன் 144 தடை உத்தரவு முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் 144 தடை உத்தரவை நீட்டித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பெங்களூருவில் வருகிற 19-ந் தேதி (நாளை) காலை 5 மணி வரை 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த 144 தடை உத்தரவு வருகிற 31-ந் தேதி தடை வரை நீட்டிக்கப்படுகிறது. 144 தடை அமலில் இருக்கும்போது பெங்களூருவில் பேரணி, ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. தர்ணா, போராட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது.

திருமண நிகழ்ச்சியில் 200 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல எந்த தடையும் இல்லை. மேலும் ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது தேசிய பேரிடர் மேலாண்மை, கர்நாடக நோய் பரவலை தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story