கால்வாய் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது சரக்கு வாகனம் மோதி 3 பேர் பலி


கால்வாய் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது சரக்கு வாகனம் மோதி 3 பேர் பலி
x

ஜவுளி நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது, கால்வாய் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது சரக்கு வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

பாகல்கோட்டை:

17 பேர் பயணம்

பாகல்கோட்டை மாவட்டம் குஷ்டகி தாலுகா தாவரகெரே பகுதியை சேர்ந்தவர் சமிதாசாப்(வயது 65). அவரது உறவினர் மவுலாசாப்(60). இந்த நிலையில் சமிதாசாப் தனது உறவினர்கள் மவுலாசாப் மற்றும் இமாமாபி ஆகியோருடன் விஜயாப்புராவில் நடைபெற்ற ஜவுளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு சென்றார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு சரக்கு வாகனம் ஒன்றில் வந்தனர். அவர்களுடன் அந்த வாகனத்தில் ஒட்டுமொத்தமாக 17 பேர் பயணம் செய்துள்ளனர்.

அவர்கள் சென்ற வாகனம், தேசிய நெடுஞ்சாலையில் பசவன்ன அசாரே காலனி அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர், சாலையில் தறிகெட்டு ஓடியது. இறுதியாக சாலையின் ஓரத்தில் இருந்த கால்வாய் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி நின்றது. இதில் வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் டிரைவர் உள்பட பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

3 பேர் பலி

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி சமிதாசாப், அவரது குடும்பத்தினர் இமாமாபி, மவுலாசாப் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் விபத்தில் சிக்கியது தெரிந்தது. இதுகுறித்து டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வராததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் கூறினர்.


Next Story