சிறையில் உள்ள பயங்கரவாதி நசீரை 8 நாள் காவலில் எடுத்த போலீசார்


சிறையில் உள்ள பயங்கரவாதி நசீரை 8 நாள் காவலில் எடுத்த போலீசார்
x

பெங்களூருவில் நாச வேலைக்கு சதி திட்டம் தீட்டிய சம்பவத்தில், சிறையில் உள்ள பயங்கரவாதி நசீரை 8 நாள் காவலில் எடுத்த போலீசார், கைதிகளுக்கு பயிற்சி அளித்தது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு:

பெங்களூருவில் நாச வேலைக்கு சதி திட்டம் தீட்டிய சம்பவத்தில், சிறையில் உள்ள பயங்கரவாதி நசீரை 8 நாள் காவலில் எடுத்த போலீசார், கைதிகளுக்கு பயிற்சி அளித்தது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதிகளுக்கு பயிற்சி

பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே சுல்தான் பாளையாவில் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகளை கடந்த 19-ந் தேதி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். அவர்கள் கொலை வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது, கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நசீருடன் பழக்கம் ஏற்பட்டு இருந்தது.

அவர்களை மூளை சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் நசீர் சேர்த்திருந்தார். இதுபோல், தலைமறைவாக இருக்கும் ஜுனைத்திற்கும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் வைத்து நசீர் பயிற்சி அளித்திருந்தார். இதையடுத்து, பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்தது, பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டது தொடர்பாக பயங்கரவாதி நசீரை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தார்கள்.

நசீருக்கு போலீஸ் காவல்

இதற்காக பெங்களூரு என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் பயங்கரவாதி நசீரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டு இருந்தனர். இந்த நிலையில், என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டும் நசீரை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உள்ளது.

இதையடுத்து, பரப்பனஅக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வந்த நசீரை போலீசார் காவலில் எடுத்துள்ளனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறையில் இருந்து கொண்டே கைதிகளுக்கு பயிற்சி அளித்தது குறித்து போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றுள்ளனர்.

தீவிர விசாரணை

ஏனெனில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஜுனைத் மற்றும் தற்போது கைதாகி இருக்கும் 5 பயங்கரவாதிகளுக்கும் நசீர் பயிற்சி அளித்ததுடன், பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபடுவதற்கும் தூண்டி இருந்தார். அதுபற்றி அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பெங்களூருவில் பயங்கரவாதிகள் வேறு யாரும் பதுங்கி இருக்கிறார்களா? தலைமறைவாக இருக்கும் ஜுனைத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவது குறித்தும் நசீரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story